பணம் என்றால் என்ன?
பணம் என்பது இரு நபர்களுக்கு இடையே நடக்கும் மதிப்பு பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகம். மேலும் மதிப்பை சேர்த்து வைக்கும் பெட்டகம் ஆகும்.
பணம் என்பது மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள் மற்றும் சேவைகள் முதலியவற்றை பரிமாறிக்கொள்ள ஒரு அரசால் உறுதியளிக்கப்பட்ட அலகு ஆகும். பணத்திற்கு என்று தனியாக மதிப்பு கிடையாது. மக்களுக்கு அரசின் மீதிருக்கும் நம்பிக்கையே பணத்திற்கு மதிப்பை அளிக்கிறது.
முற்காலத்தில் மனிதர்கள் தங்களுக்குள் பொருட்களை பரிமாறி கொள்ள பண்டமாற்று முறையை பயன்படுத்தினர். அதில் பல சிக்கல்கள் இருந்தன. பின்னர் உப்பு, சிப்பி போன்றவற்றை பணத்தை போல் பயன்படுத்தினர். பின்னர் கிமு 600 களில் நாணயங்கள் புழக்ககத்திற்கு வந்தன. தமிழ்நாட்டிலும் பாண்டியர்கள் காலத்தில் பயன்படுத்திய உலோகத்திலான நாணயங்கள் கிடைத்துள்ளன. முதலில் பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தின் மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயங்கள் அதன் எடைக்கு ஈடாக மதிப்பிடப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் நீட்சியாக பார்க்கலாம்.
அதற்கு பின்னர் அரசாங்கங்கள் உலோகங்களை நாணயமாக பயன்படுத்தாமல் அவற்றை தங்கள் இருப்பில் வைத்துக்கொண்டு அதற்கு ஈடான மதிப்பில் பணத்தாளை வெளியிட்டனர். இது கடன் பணம் எனப்படும். நாளடைவில் உலோகங்களை சாராமல் பணத்தை உருவாக்கி இந்த பணத்தாளிற்கு இவ்வளவு மதிப்பு என அரசின் ஆணையால் பணத்தாள் மதிப்பு பெற்று வருகிறது. குறிப்பாக சொன்னால் 1970க்கு முன்னர் அரசின் தங்க இருப்பிற்கு ஈடாக பணம் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் தங்க மாற்றுமுறை முடிவுக்கு வந்து வெறும் அரசின் உறுதிமொழியினால் பணம் அதன் மதிப்பை பெற்று வருகின்றது. பணத்தின் மதிப்பு அரசாங்கத்தின் மேலுள்ள நம்பிக்கையினால் மட்டுமே. உதாரணமாக பணமதிப்பிழப்பின் போது அரசாங்கத்தின் உத்தரவினால் ஒரு நொடியில் பணம் அதன் மதிப்பை இழந்துவிட்டது.
ஒரு பொருளாதாரத்தில் உள்ள பணத்தின் அளவை கட்டுப்படுத்துவது பணவியல் கொள்கை (Monetary policy) எனப்படும். பணவியல் கொள்கை என்பது மத்திய வங்கி குறிப்பிட்ட இலக்குகளை அடைய பண விநியோகத்தை கட்டுப்படுத்தும் செயல்முறை ஆகும். நிலையான விலைகள் உள்ள சூழலில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதே பணவியல் கொள்கையின் குறிக்கோள். தோல்வியுற்ற பணவியல் கொள்கை பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும்.
இன்றைய சூழலில் பணம் இரண்டு விதமாக உருவாக்கப்படுகின்றது. 1. சட்டபூர்வ பணம் - மத்திய வங்கி அச்சடித்து உருவாக்கும் பணம் 2. வங்கி பணம் - கடன் வாங்கும் வாடிக்கையாளரின் கடன்களை வைப்புத்தொகையாக பதிவு செய்வதன் மூலம் வங்கிகளால் உருவாக்கப்படும் பணம். இது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?
பல நாடுகளில் பெரும்பாலான பணம் வங்கிகள் கடன் வழங்குவதின் மூலம் உருவாக்கப்படுகிறது. நாம் நினைப்பது போல் இல்லாமல் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வைப்புநிதியை கடன் வழங்கும் இடைத்தரகர்கள் மட்டும் இல்லை. அதற்காக மத்திய வங்கியின் பணத்தை சார்ந்தும் வங்கிகள் இல்லை. மாறாக தாங்களே கடனை வழங்கி புதிய பணத்தை உருவாக்கி கொள்ள முடியும். தன்னிடம் உள்ள வைப்புத்தொகையைவிட பத்துமடங்கு அதிகமாக வங்கிகள் கடன் வழங்கிட முடியும். இதன்மூலம் பணத்தை வங்கிகள் உருவாக்குகின்றன. நம் நாட்டில் உள்ள பணத்தில் 97% இவ்வாறு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சரி மத்திய வங்கி அதிக அளவில் பணத்தை அச்சடித்து மக்களிடம் கொடுத்தால் ஏழைகளே இருக்கமாட்டார்கள் அல்லவா? இல்லை முற்றிலும் தவறு.
உதாரணமாக ஒரு நாட்டில் நூறு ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கிறது என்று எடுத்து கொள்ளுங்கள். அதேபோல் மக்களிடம் மொத்தமாக நூறு ரூபாய் இருக்கிறது என்றால் ஒரு பொருளின் விலை ஒரு ரூபாய். புதிதாக நூறு ரூபாய் அச்சடித்து மக்களிடம் கொடுத்தால் மொத்தம் இருநூறு ரூபாய் புழக்கத்தில் இருக்கும். ஆனால் பொருட்கள் மொத்தம் நூறு மட்டுமே. இப்பொழுது ஒரு பொருளின் விலை இரண்டு ரூபாய். ஆகவே பணத்தை புதிதாக அச்சடிப்பதால் பணத்தின் மதிப்பு மேலும் குறைகிறது. அதன் பெயர் பணவீக்கம்.
ஒரு பொருளாதாரத்தில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு அப்பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்புக்கு சமமாக இருக்க வேண்டும். எனவே பணத்திற்கு அடக்க மதிப்பு என்று எதுவும் இல்லை. அதற்கு பரிமாற்ற மதிப்பு மட்டுமே உண்டு. அதாவது ஒரு ரூபாய் பணத்தால் ஒரு ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்க முடியும். வர்த்தக பரிமாற்றத்தை தரப்படுத்துவதற்காக உருவாக்க பட்டதே பணம். பணம் என்பது ஒரு பொருளின் அல்லது சேவையின் மதிப்பை அளவிடும் அளவுகோல் மட்டுமே.
உலகில் உள்ள செல்வத்தின் அளவு நிலையானது இல்லை. செல்வத்தை உருவாக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். உதாரணமாக பத்து பேர் சேர்ந்து ஒரு படகு தயாரித்து நிறைய மீன்களை பிடித்து செல்வத்தை உருவாக்கலாம். அதேபோல் அதே படகு புயலில் சிக்கி உடைந்து போனால் அதே செல்வம் அழிந்து விடும். ஒரு நாட்டில் உள்ள எல்லா மக்களின் கூட்டு உற்பத்தி (பொருள் மற்றும் சேவை) பெருகினால் செல்வமும் பெருகும். ஒரு நாடு பணக்கார நாடு என்றால் பணம் நிறைய உள்ளது என்று அர்த்தம் இல்லை. அந்த பணத்திற்கு ஈடாக பொருள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது என்று அர்த்தம். இந்த விதி நாட்டிற்கு மட்டும் அல்ல. தனிநபர்களுக்கும் பொருந்தும். அதனால் உங்களுக்கு நிறைய செல்வம் வேண்டுமெனில் பணத்தை தேடி அலையாதீர்கள். மாறாக உங்களுடைய உற்பத்தி திறனை வளர்த்து கொள்ளுங்கள். அதற்கு தேவையானவற்றை செய்யுங்கள். மேற்படிப்பு படிக்க வேண்டுமாயின் படியுங்கள். புத்தகங்களை படியுங்கள். உங்களிலேயே முதலீடு செய்யுங்கள். இது தான் செல்வத்திற்கான முதல் விதி. உங்கள் மதிப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
செல்வம் அதன் விதிகளை புரிந்து கொண்டவர்களையே பின்தொடரும். தியாகம் மற்றும் இடர் மேலான்மை மூலமாக செல்வம் உருவாக்கப்படுகிறது. மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதால் செல்வம் உருவாகிறது. மதிப்பை உருவாக்குவதால் செல்வம் உருவாகிறது. யாரும் பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கவில்லை என்றால் பணம் பயனற்றதாகிவிடும். மதிப்பு உருவாகும் இடத்திற்கு பணம் தானாகவே வந்து சேரும். நீங்கள் அதிக மதிப்பை உருவாக்கினால் அதிக பணம் வந்து சேரும். அதனால் பணத்தை விட மதிப்பை உருவாக்குவதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும்.
செல்வத்தை கடுமையான உழைப்பால் மட்டுமே உருவாக்க முடியாது. அது சாத்தியம் என்றால் துப்புறவு தொழிலாளியும் விவசாய கூலி செய்வோரும் உலகின் பெரும் செல்வந்தர்களாக இருக்க வேண்டும். ஆனால் அது உண்மை இல்லை. சாதாரண மனிதரைவிட வித்தியாசமான மனநிலை கொண்டவர்களே செல்வத்தை உருவாக்குகின்றனர்.
முதலில் உங்கள் நேரத்தை விற்பதை நிறுத்துங்கள். உங்கள் நேரம் விலைமதிப்பற்றது. கடுமையாக உழையுங்கள். அதே சமயம் புத்திசாலித்தனமாக உழையுங்கள். உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்கச் செய்யுங்கள். நீங்கள் செல்வந்தராக ஆவதற்கு பணத்தை ஒரு கருவியாக உபயோகியுங்கள். செல்வம் காலப்போக்கில் பொறுமையாக குவியும் என்று நினைவில் கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு பணம் நமக்கு உழைப்பதற்காக வைத்திருக்கிறோம் என்பது முக்கியம். செல்வம் வாழ்நாள் முழுவதும் விளையாடும் விளையாட்டு. செல்வத்தை உருவாக்க நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் தேவைப்படும்.
இந்த உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் நிலையானவை மற்றும் அளவிடகூடியவை என்பது தவறான புரிதல். இவ்வுலகில் செல்வம் குறிப்பிட்ட அளவு மட்டும் இல்லை. காலம் காலமாக செல்வம் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வுலகில் ஒரே நிலையான அளவில் மட்டும் செல்வம் இருந்தால் ஒருவர் இன்னொருவரிடமிருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே செல்வந்தராக முடியும். ஆனால் அது உண்மை இல்லை. ஒருவரின் இழப்பு யாரோ ஒருவரின் ஆதாயம் இல்லை. உலகில் உள்ள செல்வத்தின் நிகர மாற்றம் பூஜ்யம் அல்ல. இவ்வுலகில் செல்வம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து உருவாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகிறது. வேறு விதமாக கூறினால் உங்கள் இழப்பு வேறொருவருடைய ஆதாயம் இல்லை. சிறுவயது முதல் செல்வம் பூஜ்ய தொகை விளையாட்டு என்று நம் மனதில் திணிக்கப்படுகிறது. உண்மையில் செல்வம் பொது வெற்றி விளையாட்டு.
முடிவில்,
பணமே வாழ்க்கையின் நோக்கம் அல்ல. பணம் நம் வாழ்க்கையின் நோக்கத்திற்கான வழி மட்டுமே.
உங்களை வளர்த்து நீங்கள் சந்தைக்கு வழங்கும் மதிப்பை அதிகரியுங்கள். பணம் தானாக உங்களை தேடி வரும்.
பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒன்றிற்கு இன்னொன்று கண்டிப்பாக தேவை இல்லை.
ஒரு சமூகத்தில் பணம் எப்போதும் அதனை சரியாக கையாளத் தெரிந்தவர்களின் கரங்களக்கே நகரும்.
உங்களால் சரியாக கையாள முடியாத செல்வத்தை உங்களால் பாதுகாக்கவும் முடியாது.

கருத்துகள்
கருத்துரையிடுக