என்னை பற்றி....
இந்தியாவில் படித்து வேலைக்கு போகும் பாமர மனிதர்களில் நானும் ஒருவன். நான் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறேன். வாழ்க்கைக்கேற்ற சம்பளம் கிடத்தாலும் இரவு நேரப்பணி, குடும்ப விடயங்களை கவனிக்க நேரமின்மை, பணிச்சுமை காரணமாக பல முக்கிய நேரங்களில் குடும்பத்துடன் இருக்க முடியாமல் போனது ஆகியவற்றால் இந்த வேலையை விட்டு வேறு தொழில் செய்யலாம் என பலமுறை எண்ணியுள்ளேன்.
எல்லோரைப்போல நானும் முதலில் வரியை சேமிப்பதற்காக முதன்முதலில் முதலீடுகளைப் பற்றி படிக்கத் தொடங்கினேன். பிறகு நண்பர் சொன்னதால் என்னவென்று கூட அறிந்து கொள்ளாமல் பரஸ்பர நிதியில் சிறு தொகையை 2014ல் முதலீடு செய்தேன். இன்றுவரை நான் முதலீடு செய்த மதிப்பைக்கூட அந்த முதலீடு பெறவில்லை என்பது வேறு விடயம். பின்னர் 2016ல் பரஸ்பர நிதி மற்றும் பங்குச்சந்தையை பற்றி படிக்க தொடங்கினேன்.
ஒரு பரஸ்பர நிதி விநியோக நண்பரின் மூலம் பரஸ்பர நிதிகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தேன். அந்த விநியோகஸ்தரின் நண்பரின் உதவியோடு ஒரு பங்குச்சந்தை தரகரிடன் உறுப்பினர் ஆகி 2016யின் பிற்பகுதியில் இருந்து பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்து வருகிறேன்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பங்குச்சந்தை என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது. அது ஒரு சூதாட்ட இடம் போலவே தோன்றியது. அப்போது அந்த தரகர் நண்பர் கூறிய பங்குகளில் சிறு அளவு முதலீடு செய்து வந்தேன்.
டர்னிங் பாயின்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். என்னுடைய டர்னிங் பாயின்ட் டிவிட்டரில் சிறந்த முதலீட்டாளர்களை தொடர்ந்தது. நீண்டகாலம் பங்குச்சந்தையில் லாபகரமாக முதலீடு செய்த நிறைய முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதைப்போல யுடியூப்பில் அத்தகைய முதலீட்டாளர்களின் வீடியோக்களும் உள்ளன. பங்குச்சந்தை மற்றும் தனிநபர் நிதிக்கொள்கைகள் பற்றி நிறைய நல்ல நூல்கள் உள்ளன. கடந்த நான்கு வருடங்கள் இவற்றையெல்லாம் படித்து என்னை நானே முன்னேற்றி வருகிறேன். நிதி சுதந்திரத்தை நோக்கி என்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக