பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் - ஜார்ஜ் எஸ். க்லேசன் - புத்தக சுறுக்கம்
1926 ல் எழுதப்பட்ட இந்த புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் நடக்கும் நிகழ்வுகளை உவமையாகக் கொண்டு நிதி ஆலோசனைகளை வழங்குகிறது. இன்றளவும் தனிநபர் நிதிக்கொள்கையின் உன்னதமான புத்தகமாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஆலோசனைகள் ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்ததைப்போல இன்றைய காலகட்டத்திற்கும் முற்றிலும் ஏற்றயே. எக்காலத்திலும் செல்வத்தை வரையறுக்கும் கொள்கைகளை எளிதாக விளக்கும் இந்த புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.
பணத்தை கையகப்படுத்தும் எளிய விதிகளை புரிந்து கொள்பவர்களிடம் பணம் ஏராளம் சேர்கிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வளமான பாபிலோனில் பணத்தை கட்டுப்படுத்திய அதே விதிகள் இன்றும் பணத்தை இயங்குகின்றன.
1. நீங்கள் சம்பாதிக்கும் ஒரு பகுதியை உங்களுக்கென்று ஒதுக்குங்கள். அது உங்கள் ஊதியத்தில் பத்து சதவிகத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும். ஏன்? என் வருமானம் எல்லாம் எனக்குதானே? ஒரு பகுதி மட்டும் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? நம் வருமானத்தில் வாடகை கொடுக்கிறோம், காய்கறி, மளிகை கடை என எல்லோருக்கும் கொடுக்கிறோம். நமக்கு என காட்ட என்ன உள்ளது? வருங்காலத்தில் உங்களுக்காக உழைப்பதற்காக ஒரு பகுதியை சேமியுங்கள். அதுதான் நீங்கள் உங்களுக்கென்று ஒதுக்குவது. 10% ஒதுக்குவதனால் உங்கள் வாழ்க்கை தரத்தில் எந்த ஒரு வித்யாசமும் ஏற்படப் போவதில்லை. சேமித்ததுபோக மிச்சத்தில் செலவு செய்யவும். செலவு செய்தததுபோக மிச்சத்தில் சேமிக்காதீீீர்கள்.
2. வருமானத்திற்கு குறைவாகவே செலவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள். சம்பளம் அதிகமானதும் சேமிப்பேன் என்றால் நினைவில் கொள்ளுங்கள் உங்கள் ஊதிய உயர்வுக்கு ஏற்ப உங்கள் தேவைகளும் அதிகரிக்கும். அதற்கு பெயர் வாழ்க்கை முறை பணவீக்கம். முதலில் எது தேவை? எது ஆசை என்று பிரித்து அறிந்து கொள்ளுங்கள். சேமித்ததுபோக மிச்சத்தில் முதலில் உங்கள் தேவைகளையும் பிறகு ஆசைகளைையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
3. சேமித்த பணத்தை முதலீடு செய்யுங்கள். நீங்கள் சேமிக்கும் பணத்தை பெட்டியில் பூட்டி வைத்தால் நீங்கள் கண்டிப்பாக செல்வந்தராக முடியாது. நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு பணமும் உங்களுக்காக ஊழியம் செய்ய வேண்டும். சேமித்த பணத்திலிருந்து வரும் வருமானமும் உங்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும். செல்வந்தராக நீங்கள் மட்டும் உழைத்தால் போதாது. நீங்கள் செல்வந்தராக வேண்டும் என்றால் நீங்கள் சேமித்த பணமும் அதிலிருந்து வரும் லாபமும் உங்களுக்காக உழைக்க வேண்டும். பணத்தை சட்டப்பூர்வமாக பெருக்கும் வழிகளை கண்டறிந்து முதலீடு செய்ய வேண்டும். பல வழிகளில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். நிலையான வருமானத்தை தரக்கூடிய சொத்தை உருவாக்குங்கள்.
4. முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். எங்கே நம் முதலீடு பாாதுகாப்பாக வட்டியுடம் திரும்ப கிடைக்குமோ அங்கு முதலீீீடு செய்யுங்கள். அதற்காக நிதி விடயங்களில் அனுபவம் மிக்க திறமைசாலிகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுங்கள். முதலீீட்டிலிருந்து வரும் லாபத்தை விட முதலீட்டை முழுவதுமாக திரும்பப் பெருவதே முக்கியம்.
5. உங்கள் கடன்களை முதலில் முழுமையாக அடைத்து விடுங்கள். உங்களது வருமானத்தில் ஒரு பகுதியை மாதாமாதம் கடனை அடைக்க உபயோகியுங்கள்.
6. எதிர்காலத்துக்கான ஒரு நிலையான வருமானத்தை உருவாக்கி கொள்ளுங்கள். உங்கள் முதுமையில் உங்களுக்காகவும் உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்திற்காகவும் ஒரு நிலையான வழியை இப்பொழுதே உருவாக்குங்கள். அதாவது உங்கள் உழைப்பு இல்லாமல் வரும் நிலையான வருமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். எதிர்பாராத இடர்களுக்காக காப்பீீடு செய்து கொள்ளுங்கள்.
7. உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிலேயே நீங்கள் முதலீீீடு செய்யுங்கள். அதிக வருமானத்தை பெறும் வழிகளை கற்றுக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் புதியதை கற்றுக்கொண்டே இருங்கள். எல்லாவற்றிற்கும் ஆயத்தமாய் இருப்பவர்களுக்கே எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும். இவ்வுலகில் மனிதனின் செயல்களுக்கேற்ப செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும். இவ்வளவு தான் என்று யாராலும் நிர்ணயிக்க முடியாது. அதனால் கடுமையாக உழையுங்கள்.
8. செயல்திறன்மிக்கவர்களையே அதிர்ஷ்ட தேவதை வந்தடைவாள். காலம் தாழ்த்தாமல் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்பவருக்கே அதிர்ஷ்டம் கிடைக்கும். குறுக்குவழியில் வரும் செல்வம் அதே வழியில் சென்று விடும். அறிவுத்திறனாலும் தொடர்ச்சியான கவனத்தினாலும் வரும் செல்வம் மெதுவாக வளர்ந்தாலும் நீடித்து நிலைக்கும்.
9. மொத்தமான ஒரு தொகைக்காக ஆசைப் படாதீர்கள். நம்முடைய உழைப்பையோ நேரத்தையோ சாராமல் வரும் நிலையான வருமானத்தை உருவாக்குங்கள். நம்மில் நிறையபேர் லாட்டரியைப் போல நிறைய பணம் கிடைத்தால் எந்த கவலையும் இல்லாமல் வாழலாம் என நினைக்கின்றோம். ஆனால் பணத்தை நிர்வகிக்க தெரியாமல் பலர் ஒரு வருடத்திலேயே பணத்தையெல்லாம் இழந்து பழைய நிலைக்கு வந்து விடுகின்றனர். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் அல்ல. சம்பாதித்ததில் எவ்வளவு முதலீீடு செய்தீர்கள் அந்த முதலீீீட்டிலிருந்து எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதே மிகவும் முக்கியம்.
10. பேராசை உங்கள் கண்களை மறைக்க விடாதீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு யதார்த்தமானதாக இருக்கட்டும். நீங்கள் சம்பாதிப்பதை சரியான முறையில் முதலீடு செய்யும் வரை உங்கள் பணம் உங்களுடையது அல்ல.

கருத்துகள்
கருத்துரையிடுக