இந்த வலைப்பதிவில் நிதி சுதந்திரத்தை நோக்கிய எனது பயணத்தில் நான் கற்றுக்கொண்டதை பதிவிட்டு வருகிறேன்.
பங்குச்சந்தையைப் பற்றியும் நிதிச்சுதந்திரத்தை பற்றியும் படிக்க ஆரம்பித்த காலத்தில் அவற்றைப்பற்றி தமிழில் மிகக்குறைந்த அளவிலேயே வலைதளங்களில் கிடைத்தன. ஆங்கில வலைதளத்தில் கிடைக்கும் தரத்திலும் என்னைப்போன்ற சாமானியனுக்கு எளிதில் புரியும் வகையிலும் தமிழ் வலைப்பக்கங்களில் அரிதாகவே இருந்தது.
என்னுடைய பணிச்சூழல் காரணமாக அதிக நேரம் புத்தகங்களையும் படிக்க முடியவில்லை. ஆனாலும் அறிவு என்ற ஆயுதம் இல்லாமல் பங்குச்சந்தையில் பிழைக்க முடியாது. டுவிட்டர், யுடியூப் போன்ற சமூக ஊடகங்களிலும் பல வலைப்பக்கங்களையும் படித்து கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி வருகிறேன்.
பங்குச்சந்தை, தனிநபர் நிதிக்கொள்கைகள் பற்றிய நிறைய ஆங்கில புத்தகங்கள் என்னைப்போன்ற சாமான்ய மனிதனுக்கு மிகவும் கடினமனமாக இருந்தது.
இந்த பயணத்தில் பணத்தையும் முதலீடுகளை பற்றியுமான என்னுடைய பல நம்பிக்கைகள் தலைகீழாக மாறின. பணத்தை பற்றி இதுவரை இந்த சமூகம் கற்றுத்தந்தவைகள் எல்லாம் சிதறின.
ஒரு சராசரியான குடும்பத்தில் பிறந்து மாதச்சம்பளம் பெறும் சாமானியனான என்னுடைய நிதிச்சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் நான் படித்து அனுபவித்து கற்றுக்கொண்ட விடயங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறேன்.
பங்குச்சந்தையில் பல வழிகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். தின வர்த்தகம், குறுகிய கால வர்த்தகம், நீண்ட கால முதலீடு, மற்றும் டிரைவேட்டிவ்ஸ் எனப்படும் ஊகத்தினாலான முதலீடுகள். இவற்றிற்கான முதலீடுகள், ஆபத்துகள் (risks), வருமானம், திறமை, அறிவு, மற்றும் மனநிலை வேறுவேறானவை ஆகும். இப்பதிவில் நீண்ட கால முதலீடுகளை பற்றி மட்டுமே பதிவிட இருக்கிறேன்.
வேலைக்கு சென்று மாத வருமானம் பெரும் சராசரி மனிதனுக்கு பரஸ்பர நிதி மற்றும் நல்ல நிறுவனப்பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதே சரி என்பது என் எண்ணம். மற்றவைகளில் ஆபத்து அதிகம்; நேரமும் அதிகம் தேவை; முதலைவிட அதிக நட்டம் அடையும் ஆபத்தும் உண்டு. நேரடியாக பங்குகளைப்பற்றி அறிந்து கொள்ள நேரமில்லாதவர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.
வாருங்கள். நீண்ட கால முதலீடுகள், தனிநபர் நிதி, பணம் ஆகியவற்றின் கொள்கைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக