1
ஜெஃப் பெசோஸ் – 166 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
பில் கேட்ஸ் – 109 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
மார்க் சக்கர்பெர்க் – 85 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
வாரன் பஃபெட் – 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
முகேசஷ் அம்பானி – 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
நீங்கள்.......
நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள். கல்லூரியில் படித்த
பட்டத்திலிருந்து பெற்ற ஒரு வேலை. உங்களிடம் சேமிப்பு அதிகம்
இல்லை. உங்கள் அன்றாட செலவுகள் வேகமாக அதிகமாகி கொண்டிருக்கிறது. உங்கள்
வேலையில் உங்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்கவில்லை என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு சில கடன்கள் இருக்கிறது – வீடு, கார் மற்றும் தனிநபர் கடன். ஒருவேளை நீங்கள் ஒரு மாணவராக
இருக்கலாம். ஒரு வேலைக்காக படிக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு வேலை
கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்
என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் பணக்காரர் ஆவது எல்லாம் வெறும் பகல் கனவு போல் தெரிகிறது.
நீங்களே உங்களையே கேட்டுக்கொள்கிறீர்கள். லட்சாதிபதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள், குறிப்பாக
இளம் வயதினர் மட்டும் எப்படி சாதித்தார்கள்? அது உங்களை குழப்பலாம், உங்களை கோபப்படுத்தலாம். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் செல்வத்தில் பிறந்தவர்கள், அவர்கள் பணத்திற்காக ஏமாற்றினார்கள், பணம் தீயது, நான் அவ்வளவு புத்திசாலி இல்லை, எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நீங்களே உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறீர்கள். நீங்கள் கண்ட கனவுகள்
- உங்கள் கனவு வீடு, கார், கடன்களை அடைப்பது, உலகம் முழுவதும்
பயணம் செய்வது - என்றென்றும் அப்படியே இருக்கும் - நெடுங்கனவுகள் - வெறும் கனவுகள்
மட்டுமே.
நீங்கள் ஒரு கடுமையான யதார்த்தத்தை உணருகிறீர்கள். இது ஒரு மோசடி விளையாட்டு. இது ஆரம்பத்தில்
இருந்தே ஒருதலைபட்ச விளையாட்டு. அதில் நீங்கள் இழக்கும் அணியில் இருக்கிறீர்கள். அது உண்மை இல்லை என்று நான் சொன்னால்? பணக்காரர் ஆவதற்கு ஒரு வழி
இருக்கிறது - செல்வத்திற்கான ஒரு சமன்பாடு இருக்கிறது, பணம் வேலை செய்யும் முறையின் பின்னால் ஒரு அறிவியல்
இருக்கிறது. அந்த கனவுகளை கைவிட நீங்கள் செய்தது போதாது. பணம் என்கிற நாணயத்திற்கு காட்டப்படாத ஒரு பக்கம் உள்ளது. ஆனால் நான் உங்களை எச்சரிக்கிறேன் – இந்த சாலை மிகவும் கடினமானது, அது போராட்டங்கள் மற்றும் ஏற்ற தாழ்வுகளால் நிறைந்தது. அதில் பள்ளி முறையும் சமூகமும்
இதுவரை உங்களுக்குச் சொல்லாத சில கடினமான உண்மைகளை நீங்கள் உணர வேண்டியிருக்கும். உங்களில் பலர் இந்த சாலையின் இறுதியை அடையாமல்
போகக்கூடும். ஆனால் சாலையின் முடிவை எட்டியவர்களுக்கு நீங்கள் அடைய முடியும் என்று
நினைத்ததைத் தாண்டி செல்வம் உள்ளது. சாலையின் முடிவில் மீண்டும் ஒருபோதும்
பணத்தைப் பற்றி கவலையற்ற சுதந்திரம் உள்ளது. நீங்கள் அந்த கடுமையான பயணத்திற்கு
தயாரா?
2
பணத்தைப் பற்றி நீங்கள் உண்மையில் என்ன
நினைக்கிறீர்கள்? பணம் ஒரு வேலையால் சம்பாதிக்கப்படுகிறது; எல்லா தீமைகளுக்கும்
மூல காரணம்; பணம் மரபு வழி வருவது. நீங்கள் பெருமளவு பணத்தை பெற
விரும்புகிறீர்களா; உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதி பணத்தை துரத்துகிறீர்களா? பணத்தைப் பற்றி நாம்
நினைப்பதில் பெரும்பாலானவை நமது வளர்ப்பு மற்றும் சுற்றுசூழலால் பாதிக்கப்படுகின்றன. நீங்கள் பணம் இல்லாத ஒரு
குடும்பத்தில் பிறந்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் அதிக பணம்
இருக்காது என்று நீங்களும் நினைப்பீர்கள். பெரும்பாலான பள்ளிகள் பணத்தைப் பற்றி
கற்பிக்கவில்லை என்பதால், உங்களில் பெரும்பாலோர் பணத்தைப் பற்றி தவறான
நம்பிக்கைகளைக் கொண்டிருப்பீர்கள். நம் வாழ்நாள்
முழுவதும் பணத்தை பற்றி நாம் கொண்டுள்ள எண்ணத்தை மாற்ற வேண்டும். செல்வந்தர்களை தீயவர்கள், அடுத்தவரிடமிருந்து கொள்ளையடிப்பவர்கள் அல்லது ஊழல்காரர்கள் எனக் காண்பிக்கும் பழக்கம் நம்
சினிமாக்களில் எப்போதும் உள்ளது. நம்மில் பெரும்பாலோர் செல்வந்தர்களை பற்றி அதே எண்ணத்தில்தான் இருக்கிறோம்.
உண்மை என்னவென்றால், உலக கோடீஸ்வரர்களில் 68% சுயமாக உழைத்து முன்னேறியவர்கள். உங்களுக்கு தெரியாதது இவர்களுக்கு என்ன தெரியும்? உண்மை என்னவென்றால் செல்வத்திற்கான உங்கள் சமன்பாடு
அனைத்தும் தவறு. செல்வத்திற்கான நம்முடைய
சமன்பாடு ஒரு வேலையிலிருந்து சம்பாதித்த சம்பளம். அதனால் ஒரு வேலையிலிருந்து சம்பளம்
பெறுவதற்கான வாய்ப்பு ஒன்றே நமது கல்வியின் நோக்கமாகிறது. அதில் என்ன தவறு? ஆனால் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள். வாருங்கள் பார்க்கலாம்.
3
நம் அனைவருக்கும் ஒரு விலைமதிப்பற்ற சொத்து உள்ளது - எல்லாவற்றிலும் மிக முக்கியமான சொத்து. அது போய்விட்டால், அதை திரும்பப் பெற வழி இல்லை. அது நம்முடைய நேரம். ஒரு வேலையில் நீங்கள் சம்பாதிக்கும்
பணத்தின் அளவு நீங்கள் அதில் செலவிடும் நேரத்தைப் பொறுத்தது. ஒரு வாரத்தில்
நீங்கள் எல்லா நாட்களும் வேலை செய்தால், 20 ஆண்டுகளில் உங்களிடம் சில லட்சங்கள் இருக்கும். அதே நேரத்தில் பணவீக்கம் உங்கள் பணத்தின் மதிப்பை பெருவாரியாக குறைந்திருக்கும். உண்மையில் இவ்வளவு காலம் உழைப்பதன் மூலமும், சிக்கனமாக வாழ்வதன் மூலமும் நீங்கள் வயதான காலத்தில்
மட்டுமே லட்சாதிபதியாக மாறுவீர்கள். அந்த வயதிற்குள் நம்முடைய மிக முக்கியமான
விலைமதிப்பற்ற சொத்தான நேரம் தண்ணீர் போல் நம் விரல்களின் நடுவே நழுவியிருக்கும். நீங்கள்
அந்த நேரத்தை பணத்திற்காக வர்த்தகம் செய்தீர்கள். அதுவும் கணிசமான அளவு இல்லை.
எனவே மீண்டும் நீங்களே கேட்டுக்கொள்வீர்கள். இவ்வளவுதானா? பின்னர் இளம் வயதிலேயே சுயமாக முன்னேறிய லட்சாதிபதிகளிடம் கோடீஸ்வரர்களிடம் மிகவும் வித்தியாசமாக இருப்பது எது? அதற்கு பதில் அவர்கள் செல்வத்தை அடைவதற்கு ஒரு சிறந்த சமன்பாட்டைக்
கொண்டுள்ளனர். அவர்கள் உங்களை விட பணத்தைப் பற்றி நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள்.
4
முதலில் பணத்தை துரத்துவதை நிறுத்துங்கள். ஒரு
முதலாளித்துவ சமுதாயத்தில் பணத்தின் விதிகள் என்னவென்றால்: நீங்கள் நுகர்வோர்களுக்கு அளிக்கும் மதிப்பிற்கு ஏற்ப
உங்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. சரி உங்கள் மதிப்பை அளவிடுபவர் யார்? சந்தை.
அதாவது இந்த பொருளாதாரத்தின் நுகர்வோர்கள். புரியவில்லையா? கிரிக்கெட் வீரர்கள் மற்றும்
சினிமா நடிகர்கள் அதிக ஊதியம் பெறுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் ஊதியம் வழங்கப்பட வேண்டுமானால், கிரிக்கெட் அல்லது சினிமா தொழிலுக்கு முதலில் ஒரு சந்தை
இருக்க வேண்டும். கிரிக்கெட் மற்றும் சினிமாவில் மக்கள் மதிப்பைக் காண வேண்டும்.
அவர்கள் அதில் கூட்டாக பணத்தை கோடியில் செலவிட வேண்டும். சந்தையில்
கிரிக்கெட் மற்றும் சினிமாவுக்கு அதிக தேவை இருந்தால், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும், சினிமா நட்சத்திட்டங்களுக்கும் என்ன நடக்கும் என்று
யூகிக்கவும். அதற்காக அவர்கள் தாராளமாக சம்பளம் கொடுக்கப்படுகிறார்கள்.
நீங்கள் இனி எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள்
என்பது முக்கியம் அல்ல. ஹோட்டல்களில் துப்புரவாளர் சமையல்காரரை விட மிகக் குறைவாகவே சம்பளம் பெறுகிறார். ஏன்? ஏனெனில் துப்புரவாளர் செய்வது சமையல்காரர் செய்வதைவிட மதிப்பு குறைவாக இருப்பதாக சந்தை உணர்கிறது. அது கடுமையானதாக தெரிந்தாலும், துப்புரவாளரை யாராலும் மாற்ற முடியும்; வேலையைக்
கற்றுக்கொள்வதும் கடினம் அல்ல. எனவே சந்தை ஒருபோதும் அவருக்கு சமையல்காரரை விட அதிகமாக கொடுக்காது. சமையல்காரர் தனது அனுபவம் மற்றும் சமையலில்
நுணுக்கம் மூலம் அதிக மதிப்பை வழங்குவதாக
சந்தை உணருகிறது. நாம் நம்முடைய மதிப்பை எவ்வாறு அதிகரிக்க முடியும்? ஒரு வேலை என்பது குறுகிய காலத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான
எளிதான வழி அல்ல.
5
பணத்தை துரத்துவதை நிறுத்துங்கள். நுகர்வோர்களின் பிரச்சினைகளைக் கண்டறியவும். அந்த பிரச்சினைகளை தீர்க்கவும். நீங்கள் மில்லியன்
டாலர் சிக்கலை தீர்க்கிறீர்கள் என்றால், மில்லியன்களை நுகர்வோர்கள் வீசுவார்கள். அது ஒரு பில்லியன் டாலர் பிரச்சினையாக இருந்தால், தீர்வு உங்களை ஒரு பில்லியனராக
மாற்றும். அமேசான் போன்ற ஒரு வலைத்தளம் தீர்க்கும் அனைத்து சிக்கல்களையும் பற்றி
சிந்தியுங்கள் - கடைக்கு செல்வதில் உள்ள தொந்தரவு, விநியோகத்திற்காக காத்திருப்பதில் தொந்தரவு, மலிவான விலை மற்றும் பல. அமேசானின் பிற வணிகங்களைப் பற்றி
சிந்தியுங்கள். ஜெஃப் பெசோஸ் ஒரு பில்லியன் டாலர் பிரச்சினையை தீர்த்தார், அதற்காக அவருக்கு சாதகமாக வெகுமதி வழங்கப்பட்டது.
நீங்கள் பணத்தை துரத்தினால், நீங்கள் செய்வது
தவறு. இது கிட்டத்தட்ட முரண்பாடாகத் தெரிந்தாலும், நீங்கள் பணத்தை விரும்பினால்,
நீங்கள் தேட வேண்டியது பணம் அல்ல. நீங்கள் பிரச்சினைகளைத் தேட வேண்டும் மற்றும் மிக முக்கியமாக அவற்றின்
தீர்வுகள். நீங்கள் தீர்வுகளைக் கண்டறிந்ததும், அதைச் சுற்றி ஒரு வணிகத்தை
உருவாக்குங்கள்.
பிரச்சனைகளுடன் தொடங்குங்கள். எப்போதும் பிரச்சனைகளுடன் தொடங்குங்கள். உங்களைச்
சுற்றியுள்ள சந்தையைக் கூர்ந்து கவனியுங்கள். மக்கள் எதை விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்? மக்கள் எதை வேண்டும் சொல்கிறார்கள்? எது அவர்களை
விரக்தியடைய வைக்கிறது? மக்கள் எதை சிரமமாக நினைக்கிறார்கள்? நீங்கள் தீர்க்கக்கூடிய
சிக்கல் உள்ளதா? தீர்க்க மதிப்புள்ள பிரச்சினை உள்ளதா?
பிரச்சனைகளுக்கு பல மடங்கு பெருக்கக்கூடிய தீர்வைக் கண்டறியவும். உங்கள் தீர்வு அதிக அளவு மக்களை சென்றடைய வேண்டும். உதாரணமாக ஒரு உணவகத்தைத் தொடங்குவது பெருமளவு பெருக்கக்கூடிய வணிகம் அல்ல. அதனால் உள்ளூர் மக்களுக்கு
மட்டுமே உங்கள் வணிகம் சென்றடையும். அதுவே நீங்கள் ஒரு ஃப்ரான்ச்சைஸ் துவங்கினால் வணிகத்தை பெருமளவு பெருக்க முடியும். நீங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கினால், உற்பத்தி,
போக்குவரத்து செலவுகள் போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரத்தை அளவில்லாமல்
பெருக்க முடியும்.
6
ஆனால் கவனமாக இருங்கள். உங்கள் வணிகத்தில் பணம் சம்பாதிக்க உங்கள் நேரம் தேவையா? நீங்கள் ஒரு யோகா ஆசிரியராக இருந்தால் மணிக்கு 1000 ரூபாய்
வசூலிக்கிறீர்களா? வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு வணிகமாக மாறுவேடமிட்டிருக்கும் ஒரு வேலையை மட்டுமே செய்கிறீர்கள்.
உங்கள் வணிகத்தில் ஒரு நாளில் நீங்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செலவிட முடியும்.
அதுவே நீங்கள் 24x7 ஆன்லைனில் யோகா வகுப்புகளை எடுத்தால், நீங்கள் ஒரு முறை மட்டுமே
பாடங்களை உருவாக்கி உங்கள் நேரத்தை செலவிடாமல் வணிகத்தை எளிதாக பெருக்க முடியும். பெருக்கக்கூடிய வணிகமே இங்கு முக்கியம்.
இதை மறந்து விடாதீர்கள்.
சரியான அமைப்புகள் மற்றும் செயல்முறைகள் ஒழுங்காக
செயல்படுத்தப்பட்டால் உங்கள் வணிகத்தை நீங்கள் இல்லாமலே மென்மையான இயந்திரம் போல
இயக்க முடியும். உங்கள் வணிகத்தில் ஏதேனும் இருந்தால், நீங்கள் வேறொருவருக்கு
அவுட்சோர்ஸ் செய்யலாம் அல்லது உங்களுக்காக இதைச் செய்ய யாரையாவது நியமிக்கலாம்,
நிதி ரீதியாக அதைச் செய்வதில் அர்த்தமுள்ளது என்று கருதினால், அதைச் செய்யுங்கள்.
எல்லாவற்றையும் நீங்களே செய்வது ஒரு மோசமான
யோசனை. நீங்கள் சிறந்தவர் என்று நீங்கள் நினைக்கும் அளவுக்கு, அதைச் செய்ய ஒரு சிறந்த நபர் எப்போதும் இருப்பார். ஒரு தீர்வைச் சுற்றி நீங்கள் ஒரு வணிகத்தை
உருவாக்கியதும், சந்தையில் உள்ள அனைவருக்கும் அந்த தீர்வை
அணுகக்கூடியதாக மாற்றுவதே உங்கள் வேலை. இது உங்கள் ஈகோவைப் பற்றியது அல்ல. இது
உங்கள் வேட்கையைப் பற்றியது அல்ல. சந்தை உங்கள் ஆர்வத்தைப்
பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. உங்கள் வணிகம் சரியான அமைப்புகள் மற்றும்
செயல்முறைகளுடன் இயங்கினால், நீங்கள் விதைத்ததை அறுவடை செய்ய வேண்டிய நேரம்
இது.
7
இறுதியாக இந்த பாதை ஒருபோதும் பணத்தைப் பற்றியது அல்ல. பணம் என்பது
ஒரு துண்டு காகிதம். பணத்தின் மதிப்பு அதன் மீது உள்ள நமது நம்பிக்கையால் மட்டுமே இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இது ஒருபோதும் பணத்தைப்
பற்றியது அல்ல. உங்கள் கடனை செலுத்துதல், உங்கள் சொந்த வீட்டை வாங்குவது, உங்கள் கனவு காரை வாங்குவது, உலகம் முழுவதும் பயணம்
செய்வது என்று உங்கள் நிதி நிலைமையைப் பற்றி ஒருபோதும்
கவலைப்பட வேண்டியதில்லை. அதுதான் நாம் தேடும் சுதந்திரம். உங்கள் இலக்கு பணம்
தொடர்பான எதுவும் இல்லை. இது ஒரு உணர்வு. நீங்கள் என்ன
செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்வதற்கான சுதந்திரம், நீங்கள் எங்கு
வேண்டுமானாலும் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்ய முடியும். என்னிடம் பணம்
இல்லாததால் என்ன கனவுகளை தியாகம் செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டியதில்லை. மிக முக்கியமான செய்தி ஒருபோதும் இந்த பயணம் பணத்தைப் பற்றியது அல்ல. இது நம் வாழ்வில் ஒரு மதிப்புமிக்க
வளத்தைப் பற்றியது - நம் நேரம். நம்மால் ஒருபோதும் மீளப்பெற முடியாத
ஒரு மதிப்புமிக்க சொத்து - நம் நேரம். நீங்கள் விரும்பாத உங்கள்
வேலையில் உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா? அலுவலகத்திற்குச் செல்வது, வேலை செய்வது, வீட்டிற்கு வருவது, தூங்குவது, அடுத்த நாள் எழுந்திருப்பது - ஓய்வு பெறும் வரை
அதே வட்டத்தில் சுழல்வது. இந்த சுழற்சி முறையின் மூலம் உங்கள் வாழ்க்கையின் எத்தனை மணிநேரங்கள்
நழுவிவிட்டீர்கள்? ஆனால் ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம். தற்போதைக்கு உங்களுக்கு
வேறு பாதை இல்லாமல் இருக்கலாம். அப்படியானால், கவலைப்பட தேவையில்லை. குறைந்தபட்சம் உங்கள் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு உள்ளது அல்லவா?
8
இப்போது நாம் கற்றுக்கொண்ட செல்வத்திற்கான புதிய
சமன்பாடு:
பணத்தைத் துரத்துவதை நிறுத்துங்கள்.
பிரச்சினைகளை துரத்துங்கள்.
பிரச்சினைக்கு தீர்வுகளைக் கண்டறியுங்கள்.
தீர்வை சுற்றி ஒரு வணிகத்தை உருவாக்குங்கள்.
பெருமளவு பெருக்கக்கூடிய ஒரு வணிகம்.
இன்று உலகில் உள்ள அனைத்து பணமும் இப்படித்தான்
உருவாக்கப்படுகிறது.
பணத்தைப் பற்றி மீண்டும் கவலைப்பட கூடாது என்று
நீங்கள் தீவிரமாக விரும்பினால், சிக்கல்களைத் தீர்ப்பது உங்கள் வாழ்க்கையில்
அர்த்தமுள்ள போராட்டமாக இருக்கட்டும். இதனால் மட்டும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள்
மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று அர்த்தமல்ல. உங்கள் வாழ்க்கை நிறைவை அடையும்
என்று அர்த்தமல்ல. நீங்கள் மட்டுமே அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும். பணத்தை
மகிழ்ச்சியுடன் இணைக்க வேண்டாம். ஆனால் பணம் எல்லா பணப் பிரச்சினைகளையும்
தீர்க்கும். உங்கள் போராட்டத்திற்கான நோக்கம் பணப்பிரச்சினையாக இருந்தால், இந்த
பயணத்தைத் தொடர வேண்டியது அவசியம். உங்களது இந்த அற்புதமான பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

inspiring
பதிலளிநீக்கு