பங்குச்சந்தை என்றால் என்ன?
நம்மில் எத்தனை பேருக்கு பங்குச்சந்தையை பற்றிய அறிவோ நேரடி அனுபவமோ உள்ளது? நான் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கு முன் தொலைக்காட்சி செய்தியின் இறுதியில் இன்று சென்செக்ஸ் இத்தனை புள்ளிகள் உயர்ந்தது இவ்வளவு சரிந்தது என்று கேட்டதோடு சரி அதை பற்றி சிந்தக்கவோ தெரிந்து கொள்ளவோ நினைக்கவில்லை. ஏனெனில் நம்மைப்போன்ற நடுத்தர மக்களின் பார்வையில் பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம். நான் வேலைக்கு சென்ற பிறகு முதலீட்டை பற்றி படிக்க படிக்க நாளடைவில் பங்குச்சந்தை பற்றிய என்னுடைய புரிதல் தலைகீழாக மாறியது. வாரன் பஃபெட் கூறியதுபோல் ஆபத்து என்பது நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்வதால் வருகிறது. நிதிச்சந்தை மற்றும் பங்குச்சந்தை பற்றிய அடிப்படைகளை தெரிந்து கொள்ளலாம்.
பங்குச்சந்தை என்பது நம்மூரில் உள்ள வார சந்தையைப்போல வணிகங்களின் பங்குகளை வர்த்தகம் செய்யும் இடமாகும்.
ஒரு தொழில்முனைவோர் தொழில் தொடங்கியவுடன் நிதி தேவைப்படுகிறது. நிதித்தேவை இரண்டு வகைப்படும்.
1. நிலையான மூலதன செலவுகள் -
இடம், கட்டிடம் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றிற்கான செலவுகள்
2. நடப்பு மூலதன செலவுகள் - மூலப்பொருள் மற்றும் ஊதியத்திற்கான செலவுகள்.
அத்தொழிலுக்கான மூலதனம் அவரிடம் இல்லாதபோது என்ன செய்வது? அதே நேரத்தில் நம்மைப்போல பாமரரிடம் பணம் இருந்தும் நேரமின்மையாலோ விருப்பமன்மையினாலோ ஒரு தொழிலில் ஈடுபடாமல் இருக்கலாம். இவ்விருவரையும் இணைத்து மூலதனத்தை அதிக உற்பத்தி திறன்கொண்ட தொழில்களில் முதலீடு செய்வதே நிதிச்சந்தையின் (Financial
market) வேலையாகும். அவ்வாறு முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வங்கிகள். நாம் வங்கியில் வைக்கும் உபரிநிதியை வங்கிகள் நல்ல லாபம் தரும் தொழில்களுக்கு கடன் வழங்கும். இரண்டாவது நிதிச்சந்தையில் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை வாங்கி தொழிலில் முதலீடு செய்யலாம். வங்கிகளும் நதிச்சந்தையும் நம்முடைய சேமிப்பை முதலீடு செய்ய உதவுகின்றன. நிதச்சந்தை என்பது நிதிச்சொத்துக்களான கடன் பத்திரங்களையும் பங்குகளையும் வாங்கி விற்கும் இடமாகும்.
நிதிச்சந்தையின் (Financial
market) செயல்பாடுகள்
1 நம் நாட்டில் இருக்கும் செல்வத்தை உற்பத்தி பொருளாதார நடவடிக்கைக்கு ஒதுக்குவது நிதிச்சந்தையின் முக்கியமான வேலை.
2 சேமிப்பாளர்களும் முதலீட்டாளர்களும் சந்திப்பதன் மூலம் நிதிச்சொத்துக்களுக்கான விலையை நிர்ணயத்தல்
3 நிதிச்சொத்துக்களை வாங்க விற்க உதவுவதன் மூலம் நிதிச்சொத்துக்களில் பணப்புழக்கத்தை அதிகரித்தல்
4 நிதிச்சொத்துக்களின் வியாபாரத்திற்கான பரிமாற்ற விலையை குறைத்தல்
நிதிச்சந்தை இரண்டு வகைப்படும் - ஒரு வருடத்திற்கு குறைவான முதிர்வு கொண்ட சொத்துக்கள் பணச்சந்தையில் (money
market) வர்த்தகம் செய்யப்படும். நீண்டநாள் முதிர்வு கொண்ட சொத்துக்கள் மூலதன சந்தையில் (capital
market) வர்த்தகம் செய்யப்படும்.
பணச்சந்தை (money market)
- இங்கு குறுகிய கால நிதிகள் வர்த்தகம் செய்யப்படும். நடப்பு நிதி தேவைகளுக்கான குறுகிய கால கடன்பத்திரங்கள் இங்கு வர்த்தகம் ஆகும். பணச்சந்தையில் வர்த்தகம் ஆகும் கருவிகள்:
1 ட்ரெஷரி பில் (Treasury bill)
- மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்குவது. உறுதியான வருமானம், அதிக பணப்புழக்கம் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பு போன்றவை முக்கிய அம்சங்கள். அவை முகமதிப்பிற்கு குறைவான தொகையில் விற்கப்படும். வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள வித்யாசம் தான் நமது லாபம்.
2 வணிகத்தாள் (commercial paper) - நம்பகத்தன்மையுள்ள பெரிய நிறுவனங்கள் குறுகிய கால நிதித்தேவைகளுக்காக சந்தை வட்டி விகிதத்திற்கும் குறைவாக வழங்கும் உறுதி மொழி பத்திரங்கள்.
3 அழைப்பு பணம் (Call money)
- வங்கிகளுக்கு மத்தியில் நடக்கும் குறைந்த கால தேவைகளுக்கான பணப்பரிமாற்றம்.
4 வைப்புச் சான்றிதழ் (certificate of deposit
- CD) - வங்கிகளும் நிதிநிறுவனங்களும் குறுகிய கால நிதித்தேவைகளுக்காக வழங்கும் சான்றிதழ்.
மூலதனச்சந்தை (Capital market)
- இங்கு கடன் மற்றும் பங்குளான நீண்ட கால நிதிகள் திரட்டப்பட்டு முதலீடு செய்யப்படும். இங்கு சங்கிலித்தொடராக பொது சமூகத்தின் சேமிப்பு உற்பத்தி நிறுவனங்களை அடைகிறது. அதன்மூலம் அந்நிதி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. வளர்ச்சி வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் பங்குச்சந்தைகள் ஆகிய மூன்றும் மூலதனச்சந்தை ஆகும். பொருளாதார வளர்ச்சிக்கு திறம்பட செயல்படும் மூலதனச்சந்தையும் நிதிநிறுவனங்களும் இன்றியமையாதவை. மேலும் அவை சுதந்திரமானதாகவும் வெளிப்படையானதாகவும் பரிவர்த்தனை செலவுகள் குறைவாகவும் மூலதனத்தை திறம்பட ஒதுக்க ஏதுவாகவும் இருக்க வேண்டும்.
மூலதனச்சந்தை இரண்டு வகை - கடன்பத்திரங்களுக்கான சந்தை (Debt market) மற்றும் பங்குச்சந்தை (Share market). பங்குச்சந்தை இரண்டு வகை உண்டு.
1 முதன்மை சந்தை (Primary market)
- முதன்முதலில் வணிகங்கள் தங்கள் பங்குகளை விற்பதற்ககான சந்தை. இதன்மூலம் சேமிப்பாளரிடம் உள்ள முதலீடுகள் புதிதாக தொழில் தொடங்கவோ அல்லது இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ உபயோகப்படுத்த படுகிறது. இங்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நம்மைப்போன்ற சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். இங்கு முதன்முதலில் விற்பனை செய்யும் பங்குகளை initial public offer (IPO) என்பார்கள்.
2 இரண்டாம்நிலை சந்தை (Secondary market
- Stock exchange) - நாம் தினம் தோறும் கேள்விப்படும் பங்குச்சந்தையே இரண்டாம் நிலை சந்தை ஆகும். இங்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகள் பரிவர்த்தனை ஆகும். இது பழைய முதலீட்டாளர்கள் வெளியேறவும் புதிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவும் உதவுகிறது. மேலும் வெளியிடப்பட்ட பங்குகளுக்கு பணப்புழக்கத்தையும் வணிகத்தையும் வழங்குகிறது. அவ்வாறு முதலீட்டு சுழற்சியின் மூலம் முதலீட்டாளர்களின் நிதியை அதிக உற்பத்தித்திறன் உள்ள தொழில்களில் முதலீடு செய்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. செபியின் (SEBI) ஒழுங்கு முறைகளின்படி இங்கு பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இன்றைய உலகில் பங்குச்சந்தை கட்டிடங்களில் அல்லாமல் பெரும்பாலும் மின்னணு வடிவத்திலேயே செயல் படுகிறது. நீங்கள் பங்குச்சந்தையை ஒரு பதிவு பெற்ற இடைத்தரகர் மூலம் உங்கள் கணினியின் வாயிலாக அணுகலாம்.
பங்குச்சந்தை - ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகளை வாங்கவும் விற்பதற்குமான தளம். இந்தியாவில் பல்வேறு பங்குச்சந்தைகள் இருந்தாலும் முக்கியமான சந்தைகள் இரண்டே. 1 மும்பை பங்குச்சந்தை 2 தேசிய பங்குச்சந்தை
பங்குச்சந்தையின் செயல்பாடுகள்:
1 ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகளுக்கு பணப்புழக்கத்தையும் சந்தைப்படுத்தலையும் ஏற்படுத்துதல்
2 தேவையையும் வழங்கலையும் பொறுத்து பங்குகளுக்கான விலையை நிர்ணயத்தல்
3 பங்குவர்த்தகத்திற்கு செபியின் சட்டதிட்டங்களுட்பட்டு பாதுகாப்பளித்தல்
4 மூலதனத்தை முறையாக ஒதுக்கி பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்தல்
5 பங்குமுதலீட்டு பண்பாட்டை வளர்த்தல்
6 ஊகங்கள் அடிப்படையில் பங்கு பரிவர்த்தனைக்கு வாய்ப்பு அளித்தல்
இரண்டாம் நிலை பங்குச்சந்தை எதற்காக?
ஒரு ஆரோக்கியமான மற்றும் செயல்திறன் மிக்க இரண்டாம் நிலை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான சாதகமான சூழலை உருவாக்குகிறது. மேலும் வளரும் முதன்மை சந்தைக்கு தேவையான உகந்த காலநிலையை உருவாக்குகிறது. மேலும் ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் வெளியேறவும் புதியவர்கள் முதலீடு செய்யவும் வழிவகுக்கிறது.
பங்குச்சந்தையில் ஈடுபட மூன்று கணக்குகள் தேவை.
1. வங்கி சேமிப்பு கணக்கு - வாங்கிய பங்குகளுக்கான தொகையை செலுத்தவும் விற்கும் பங்குகளுக்கான தொகையை பெறவும் வங்கி கணக்கு தேவை.
2. வர்த்தக கணக்கு - இது நம் பெயரில் பங்குத்தரகரிடம் ஏற்படுத்துவது. நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை வர்த்தக கணக்கில் பரிமாறவும் அதைக்கொண்டு தரகர் நமக்காக பங்குகளை வாங்கவும், விற்ற பங்குகளுக்கான பணத்தை விற்றவரிடம் இருந்து பெறவும் இந்த வர்த்தக கணக்கு உதவும்.
3.டீமேட் கணக்கு - வாங்கிய பங்குகளை கணக்கில் கொள்ள ஏற்படுத்தப்படும் மின்னணு கணக்காகும். இதற்கு முன்னர் பங்கு சான்றிதழ் நடைமுறையில் இருந்தது.
பங்குச்சந்தையில் பங்கேற்பவர்கள்:
-சில்லறை முதலீட்டாளர்கள்
-வெளிநாடுவாழ் இந்தியர்கள்
-உள்நாட்டு நிறுவனங்கள் - LIC
-உள்நாட்டு சொத்து மேலாண்மை நிறுவனங்கள் - பரஸ்பர நிதி நிறுவனங்கள்
-வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்
இவர்கள் அத்தனை பேரின் நோக்கம் பணம் பண்ணுவது ஒன்றே.
பங்குச்சந்தை சீரிய முறையில் நடைபெற வெவ்வேறு குழுமத்தினர் அவரவர் கடமையை திறம்பட செய்யவேண்டும்.
பங்குச்சந்தை இடைத்தரகர்கள்:
ஒரு பங்கை நாம் வாங்கி அது நம்மிடம் வந்து சேருவதற்கு பல நிறுவனங்கள் திரைமறைவில் தம் வேலைகளை செபியின் சட்டங்களுக்கு உட்பட்டு செய்கின்றன. அவை:
பங்குத்தரகர்: பங்குச்சந்தையிடம் இடைத்தரகருக்கான உரிமம் பெற்ற நிறுவனம். பங்குச்சந்தையில் நாம் நேரடியாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. இதற்கெனவே உரிமம் பெற்றுள்ள தரகர்களின் மூலமாகத்தான் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியும். Zerodha, sharekhan,
hdfc securities, icici direct, kotak securities, axis direct போன்ற பங்குத்தரகர்களிடம் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும். அத்தகைய பங்குத்தரகர்களிடம் வர்த்தக கணக்கு துவங்க வேண்டும். தரகர் நமக்காக பங்கு பரிவர்த்தனை செய்வார். இச்சேவைக்காக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நாம் தரகுத்தொகை செலுத்த வேண்டும்.
வைப்பு நிறுவனங்கள் (Depositories):
1996க்கு முன்பு பங்குகளை பங்கு பத்திரங்களாக கொடுக்கப்பட்டது. 1996க்கு பிறகு பங்கு பத்திரங்கள் டஜிட்டல் மயமாக்கப்பட்டு டீமேட் (Dematerialisation) என்றழைக்கப்பட்டது. டீமேட் பத்திரங்களை டிஜிட்டல் முறையில் சேமிப்பது டீமேட் கணக்கு ஆகும். அத்தகைய டீமேட் கணக்கு சேவை வழங்குபவர்கள் வைப்பு நிறுவனங்கள் ஆவர். நம் பெயரில் உள்ள டீமேட் கணக்கில் நம்முடைய பங்குகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இருக்கும். ஒவ்வொருவருடைய டீமேட் கண்க்கும் அவரவருடைய வர்த்தக கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். தற்போது இந்தியாவில் 2 வைப்பு நிறுவனங்கள் உள்ளன - National Securities Depository Limited (NSDL) மற்றும் Central Depository Service Limited (CDSL).
வங்கிகள் - நம் சேமிப்பு கணக்கிற்கும் வர்த்தக கணக்கிற்கும் பணத்தை மாற்றவதற்கு வங்கி அவசியம்.
Clearing corporation எனப்படும் தீர்வு நிறுவனங்கள்: பங்கு வர்த்தகத்தின் உத்திரவாத்தை உறுதி படுத்துவதே தீர்வு
நிறுவனங்களின் வேலை. பெரும்பாலும் வைப்பு நிறுவனங்கள் திரைமறைவில் செயல்படும். ஒரு வர்த்தகம் ஆனவுடன் விற்றவரிடமிருந்து பங்குகளையும் வாங்குபவரிமிருந்து பணத்தையும் பரிமாற்றுவது வைப்பு நிறுவனங்களே.
இவர்கள் அனைவரையும் சட்ட வரையரைக்குள் ஒழுங்குபடுத்துவது Securities and Exchange Board of India என்கிற செபி ஆகும்.
பங்கு வர்த்தகம் நடைமுறை:
முன்பெல்லாம் பங்கு சந்தை தரைதளத்தில் அறைகூவல் ஏலமுறையில் இடைத்தரகர்கள் மூலம் பங்கு வர்த்தகம் நடைபெற்றது. இப்போது பங்கு பரிவர்த்தனை முழுவதும் இணையவழி நடைபெறுகிறது. இன்றும் பங்கு சந்தையில் பதிவு பெற்ற இடைத்தரகர்கள் மூலமாகவே பங்கு வர்த்தகம் செய்ய முடியும். பதிவு பெற்ற இடைத்தரகர்கள் தங்களது கணினியின் மூலம் பங்குச்சந்தையை அணுகி பங்குகளை வர்த்தகம் செய்ய முடியும். பங்குச்சந்தையின் மென்பொருள் எதிர்தரப்பினரிடமிருந்து பொருந்தக்கூடிய ஆர்டர் கிடைக்கும் போது பரிவர்த்தனை செயல்படுத்தும். இத்தகைய மின்னணு பங்குச்சந்தை வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் அதிகரித்து தகவல் பறிமாற்றத்தை எளிதாக்கி பங்குகளின் விலையை நிர்ணயக்க உதவுகிறது.
பங்கு வர்த்தக தீர்வு நடைமுறை:
2003 லிருந்து T+2 என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது பங்கிற்கான பணம் வாங்குபவரிடமிருந்து விற்பவரிடமும் விற்பனையான பங்குகள் வாங்குபவருக்கு பரிவர்த்தனை ஆன இரண்டு நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இதற்குமுன் 7 அல்லது 14 நாட்களுக்கு ஒருமுறை தீர்வுமுறை இருந்தது. அது ஊகத்தினாலான பரிவர்த்தனைகளுக்கு வாய்ப்பளிப்பதால் T+2 என்கிற தற்போதிய முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மின்னணு முறையில் பங்கு பரிவர்த்தனையின்போது நடைபெறுவது என்னவென்றால்:
T Day அதாவது வர்த்தக தினம் - நாம் பங்குகளை வாங்குகிறோமென்றால் அன்றைய தினம் நம் வர்த்தக கணக்கிலிருந்து அதற்கான தொகை (கட்டணங்கள் உட்பட) எடுக்கப்படும். அதே வேளையில் விற்பவரின் டீமேட் கணக்கில் உள்ள விற்ற பங்குகள் முடக்கப்படும். அன்றே பங்கு வர்த்தகத்தின் விவரங்கள் அடங்கிய ஒப்பந்த ஆவணம் வழங்கப்படும். இது சட்டப்பூர்வமான ஆவணமாதலால் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
T+1 day அதாவது இரண்டாவது நாள் - அன்று நம்மிடம் பங்கு இல்லை என்றாலும் நாம் முன்தினம் வாங்கிய பங்குகளை விற்கலாம். மேலும் அன்று பங்கிற்கான பணம் பங்குச்சந்தையை அடைகிறது.
T+2 day மூன்றாவது நாள் - பங்குகள் நமது தரகரிடம் வந்தடைந்து அன்றைக்கே நமது டிமேட் கணக்கில் சேர்க்கப்படும். மற்றும் பங்கிற்கான விற்பனைத்தொகை விற்றவரின் வர்த்தக கணக்கில் வரவு வைக்கப்படும்.
பங்கு சந்தையை பற்றி அறியாமல் ஈடுபடுவது சூதாடுவது போன்றதாகும். எனவே பங்கு சந்தை பற்றிய புத்தகங்கள், செய்தித்தாள் மற்றும் வலைப்பதிவுகளை படித்து பங்குச்சந்தை பற்றிய நமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பங்குவர்த்தகத்தில் ஈடுபடவோர் பொதுவாக அவரவர் முதலீட்டின் காலத்தை பொறுத்து இருவகைப்படுவர். ஒரு வருடத்திற்கும் குறைவாக முதலீடு செய்பவர் வர்த்தகர். நீண்டகால அதாவது ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்பவர் முதலீட்டாளர். பங்கவர்த்தகத்தில் ஈடுபடுவற்கு முன்னரே நீங்கள் வர்த்தகரா அல்லது முதலீட்டாளரா என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இருவருக்கும் வேறு வகையான திறமையும் அறிவும் வேண்டும். பங்கு சந்தையில் சாதாரண குடிமக்கள் ஈடுபடலாம். ஆனால் பங்கு சந்தை பற்றிய நமது அறிவை வளர்த்து கொண்டு ஈடுபட வேண்டும். பங்குச்சந்தை பணம் காய்க்கும் மரமோ சூதாடும் இடமோ இல்லை என்று நினைவில் கொள்ளுங்கள். பங்கு சந்தை பற்றிய நமது அறிவை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து முதலீடு செய்தால் சட்டத்திற்குட்பட்டு நமது பணத்தை பெருக்கி கொள்ள ஒரு சிறந்த வழி ஆகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக