பங்குகள் என்றால் என்ன? நிறுவனங்கள் எதற்காக பங்குகளை வெளியிடுகிறார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்? பங்குகளை வாங்குவதால் நமக்கு என்ன பயன்?
பங்குகளைப்பற்றி தெரிந்து கொள்ளும்முன் ஒரு தொழிலை தொடங்குவதை பற்றியும் அதற்கான மூலதனத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தொழில்முனைவோரிடம் ஒரு சிறந்த வணிக யோசனை இருக்கிறது எண்ணிக்கொள்வோம். உதாரணமாக ஆர்கானிக் முறையில் மரச்செக்கில் எண்ணெய் தயாரிப்பது என்று எடுத்து கொள்வோம். இந்நாளில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களுக்கு நல்ல தேவை இருப்பதாலும் தன்னால் உயர்தர எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்பதாலும் தன்னுடைய வணிகம் கட்டாயம் வெற்றி பெறும் என்று நம்புகிறார். ஆனால் அவரிடம் தொழில் தொடங்க பணம் இல்லை. அவருக்கான வழிகள் என்ன? உறவினர்களிடம் நண்பர்களிடம் கடன் பெறலாம். ஒரு வங்கியில் கடன் பெறலாம். அதற்கு அவருடைய சொத்தை அடமானம் வைக்க வேண்டும். தொழிலில் நஷ்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் கடனுக்கான வட்டியை கட்ட வேண்டும். வேறு என்ன வழி உள்ளது? தொழிலில் பிறருக்கு பங்கு அளிப்பது. அவர் தம் இரு நண்பர்களிடம் பேசி தன் தொழிலில் அவர்களை முதலீடு செய்ய ஒப்புவிக்கிறார். அவர்கள் தொழில் தொடங்கும் முன் வருவாய்க்கு முந்தைய நிலையில் முதலீடு செய்வதால் ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ் (Angel investors) என்று அழைக்கப்படுவர். அவர்கள் தொழில் முனைவோரை நம்பி தம் பணத்தை முதலீடு செய்கின்றனர். இது கடன் அல்ல முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூவரும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்கிறார்கள் என்று எடுத்து கொள்வோம். அந்த ஒரு கோடி ரூபாய் கம்பெனியின் வங்கி கணக்கில் இருக்கும். அதை விதைப்பணம் (seed money) என்பர். அதுவே ஆரம்ப பங்கு மூலதனம் (initial share capital) ஆகும். அந்நிலையில் அந்த கம்பெனியின் சொத்து ஒரு கோடி ரூபாய் அதனால் அதன் மதிப்பீடு (valuation) ஒரு கோடி ரூபாய் ஆகும். அந்த கம்பெனியின் ஒரு பங்கின் மதிப்பு 10 ரூபாய் என்றால் ஒரு கோடி ரூபாய்க்கு 10 லட்சம் பங்குகள் ஆகும். 10 லட்சம் பங்குகள் அங்கிகரிக்கப்பட பங்குகள் (authorised shares) ஆகும். அதில் தொழில் முனைவோருக்கு 40% (4 லட்சம் பங்குகள்), ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ் ஒவ்வொருவருக்கும் 5% (50 ஆயிரம் பங்குகள்) என பிரித்து வழங்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம். மீதமுள்ள 50% பங்குகள் கம்பெனியின் வசம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது அந்த தொழில்முனைவோர் பணத்தை கொண்டு இடம் மற்றும் பொருட்களை வாங்கி ஆட்களை நியமித்து தொழிலை தொடங்குகிறார். நாளடைவில் வியாபாரம் பெருகுகிறது. அவரும் தொழிலின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு திறம்பட நடத்துகிறார்.
மேலும் வணிக வாய்ப்புகள் வருவதால் தொழிலை விரிவு படுத்த எண்ணுகிறார். அதற்கு அவருக்கு மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அவர் ஒரு சிறந்த தொழிலதிபராக இருப்பதாலும் அவருடைய தொழில் நல்ல லாபம் தருவதாலும் அவரால் பிற முதலீட்டாளர்களை அணுகி முதலீடு பெற முடியும். முதலீட்டாளர் ஒருவர் அந்த கம்பெனியின் 10% பங்குகளுக்காக ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்கிறார் என்று எடுத்து கொள்வோம். அவரிடம் கொடுத்தது போக மீதம் 40% பங்குகள் நிறுவனத்தின் வசம் உள்ளது. ஒரு தொழிலின் இத்தகைய ஆரம்ப நிலை முதலீட்டாளரை வென்ச்சர் கேப்பிடலிஸ்ட் (venture capitalist) அதாவது துணிகர முதலீட்டளர் என்றழைப்பர். அத்தகைய முதலீடுகள் series A funding எனப்படும். பொதுவாக வென்ச்சர் கேப்பிடலிஸ்ட் முதலீட்டாளர்கள் ஆரம்ப நிலை தொழில்களில் முதலீீடு செய்வர். தொழிலின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். தொழில் பெருகி வளர்ந்த நிலையில் வெளியேறிவிடுவார்கள். 10% பங்குகள் ஒரு கோடி ரூபாய் என்றால் தொழிலின் மொத்த மதிப்பு 10 கோடி ரூபாயாக உயருகிறது. தொழில்முனைவோரின் 40% பங்கின் மதிப்பு இப்பொழுது 4 கோடி ரூபாய்.
மேலும் கிடைத்த முதலீட்டைக்கொண்டு அவர் தொழிலை விரிவுபடுத்தி வருவாயை பெருக்குகிறார். சில வருடங்களில் அவர் நிறுவனத்தை பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கும் விரிவுபடுத்த எண்ணுகிறார். அதற்காக நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் தேவை என கணக்கிடுகிறார். அதற்கான
வழிகள் என்ன? ஒன்று நிறுவனத்தின் லாபத்திலிருந்தே முதலீடு செய்யலாம். அதற்கு உள் திரட்டுதல் (internal accrual) என்று பெயர். இரண்டு, வங்கியில் கடன் பெறுவது. மூன்றாவது வழி மேலும் முதலீடு பெறுவது. நம் தொழிலதிபர் நிறுவனத்தின் லாபத்தில் 1 கோடியை முதலீடு செய்கிறார் என்று எடுத்து கொள்வோம். இன்னொரு வென்ச்சர் கேப்பிடலிஸ்ட் முதலீட்டாளர் 10% பங்குகளுக்காக 2 கோடி ருபாய் முதலீடு செய்கிறார். அத்தகைய முதலீடு series B funding எனப்படும். மேலும் மீதம் 30% பங்குகள் கம்பெனியின் வசம் உள்ளது. 10% பங்குகள் 2 கோடி என்றால் மொத்த தொழிலின் மதிப்பீடு 20 கோடி ரூபாய் ஆகிறது. தொழில் தொடங்கியவரின் பங்குகளின் மதிப்பு இப்போது 8 கோடி ரூபாய். இது கற்பனையாக தோன்றினாலும் நிஜ உலகில் அருமையான வியாபார யோசனைகளை கொண்ட ஜெஃப் பிசோஸ், பில் கேட்ஸ், எலன் மஸ்க், முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் செல்வம் இவ்வாறே பெறுகியது.
அந்நிறுவனம் சில வருடங்களில் வளர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கும்போது அவர் அதனை மேலும் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த நினைக்கிறார். அவருக்கு கடன் வாங்க விருப்பம் இல்லை. அதற்காக அவருக்கு 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. வென்ச்சர் கேப்பிடலிஸ்ட் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் சிறிய அளவிலேயே முதலீடு செய்வர். அதனால் அவர் Private Equity எனும் தனியார் முதலீட்டாளர்களை நாடுகிறார். பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் பெரிய நிறுவனங்கள் ஆவர். அவர்கள் மிகவும் தகுதி வாய்ந்த தொழில்முறை பின்னணி கொண்டவர்கள். வளர்ந்த தொழில்களில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்வார்கள். மேலும் நிறவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருப்பர். இதற்கு series C funding என்று பெயர். பிரைவேட் ஈக்விட்டியினர் 10% பங்குகளுக்காக 20 கோடி ரூபாய் முதலீடு செய்வதால் அவர்கள் அந்நிறுவனத்தை 200 கோடியாக மதிப்பிடுகின்றனர். மீதம் 20% பங்குகள் அந்நிறுவனத்திடமே உள்ளன. அவர்களிடம் பெற்ற பணத்தை கொண்டு தொழில்முனைவோர் அத்தொழிலை தமிழகம் முழுவதும் பெருக்கி தன் எண்ணெய்க்கென ஒரு பிரான்டை விரிவுபடுத்துகிறார்.
சில வருடங்கள் கழித்து அவரின் எண்ணெய் பிரான்ட் பிரபலமடைய அதை மேலும் இந்தியா முழுவதும் மற்றும் உலக நாடுகளுக்கெல்லாம் விரிவுபடுத்த எண்ணுகிறார். அதற்கு அவருக்கு 100 கோடி கள் முதலீடு தேவை. அதற்காக அந்நிறுவனத்தின் பங்குகளை பிறருக்கு வெளியிட முடிவு செய்யப்படுகிறது. முதன்முதலில் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதால் இதனை ஆரம்ப பொது வெளியீடு (Initial Public Offer) என்பர். அதற்காக 10% பங்குகளை மொத்தம் 100 கோடி ரூபாய்க்கு ஐ.பி.ஓ எனப்படும் முதன்மை நிலை பங்குச்சந்தையில் வெளியிடுகிறார்கள். இதனால் அந்நிறுவனத்தின் மதிப்பு 1000 கோடியாக உயர்கிறது. ஐ.பி.ஓ வில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு வியாபாரதத்தை மேலும் விரிவுபடுத்துகின்றார். ஒரு கோடி ரூபாய் மதிப்பு என்று ஆரம்பித்த தொழில் இப்போது 1000 கோடியாக பெருகுவதற்கு இத்தனை பேரின் மூலதனம் மிக முக்கியமாக அமைந்தது. ஐபிஓ வில் வெளியிடப்பட்ட பங்குகள் சில நாட்களில் இரண்டாம் நிலை பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகமாகும்.
இப்படி பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால் அந்த தொழில் முனைவோமுனைவோருக்கு என்ன லாபம்?
1 தொழிலை விரிவுபடத்துவதற்கான நிதி கிடைக்கும்
2 கடனையும் அதற்கான வட்டியையும் தவிர்க்கலாம்
3 நாம் பங்குகளை வாங்குவதன்மூலம் அந்நிறுவனத்தின் ஆபத்துகளை பங்கு போட்டுகொள்கிறோம் என்று அர்த்தம். ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடும்போது அந்த தொழில்முனைவோர் தனது வணிக ஆபத்தை பெரிய அளவிலான மக்களிடையே பரப்புகிறார்.
4 பழைய முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
5 அந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு பங்குகளை பரிசளிக்க உதவும்
6 பொதுமக்களின் அந்நிறுவனத்தின் பார்வையை அதிகரிக்கும்.
பங்கு சந்தையில் வர்த்தகமாகும் அத்தகைய நிறுவனத்தின் பங்குகளை ஆராயந்து நாமும் முதலீடு செய்தால் நம் செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக