கூட்டு வட்டி என்றால் என்ன? சாதாரண வட்டி என்பது அசல் தொகைக்கான வட்டி மட்டுமே. அதுவே கூட்டு வட்டி என்பது வட்டிக்கான வட்டி. அசல் தொகையுடன் அதற்கான வட்டியையும் சேர்த்து வட்டி கணக்கிடப்படும். கூட்டு வட்டியின் சக்தியை உணர்த்தும் ஒரு சிறிய கதையை பார்ப்போம்.
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு புலவர் மன்னனை புகழ்ந்து பாடி பரிசு பெற எண்ணுகிறார். அவ்வாறு அவர் பாடிய பாடலை கேட்டு மகிழ்ந்து என்ன பரிசு வேண்டும் என மன்னர் கேட்கிறார். அதற்கு புலவர் சதுரங்க பலகையில் முதல் கட்டத்தில் ஒரு நெல்மணியும் இரண்டாவது கட்டத்தில் இரண்டு நெல்மணியும் அதற்கு அடுத்த கட்டத்தில் முந்தைய கட்டத்தை போல் இரண்டு மடங்கு நெல்மணியுமாக மொத்தம் 64 கட்டங்களுக்கு நெல்மணிகளை கொடுத்தால் போதும் என்கிறார்.
இதை கேட்ட அரசர் கூட்டு வட்டியின் சக்தியை புரிந்து கொள்ளாமல் அது மட்டும் போதுமா என்று புலவரை கேட்கிறார். புலவர் தான் கேட்டதைப்போல் நெல் கொடுத்தால் போதும் என்கிறார். புலவர் பிழைக்க தெரியாதவர் என்று மன்னனும் பிற அமைச்சர்களும் எண்ணுகின்றனர். சில நாட்கள் கழித்து அமைச்சர் புலவர் கேட்டபடி கொடுக்க நெல் நமது நாட்டிலேயே இல்லை என்கிறார். புலவர் கேட்டதுபோல் கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு நெல்மணிகள் கொடுக்க வேண்டும் என கணக்கிட்டீர்களா? தலையை சற்று பிடித்துக்கொள்ளுங்கள். அந்த தொகையை கேட்டால் உங்களுக்கு தலை சுற்றலாம். அவர் கேட்டதுபோல் கணக்கிட்டால் 64 வது கட்டத்தில் வரும் தொகை -
18,446,744,073,709,551,615
இதை எப்படி உச்சரிப்பது என்றே தெரியவில்லை. நம்மில் பலர் அந்த மன்னரைப் போல கூட்டு வட்டியின் சக்தியை அறியாமல் இருக்கிறோம்.
"கூட்டு வட்டி உலகின் எட்டாவது அதிசயம். அதைப் புரிந்து கொள்பவர் அதனை சம்பாதிக்கிறார். அதனை புரிந்து கொள்ளாதவர் அதனைச் செலுத்துகிறார்" - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதாக கூறப்படுகிறது. யார் இதை சொன்னார் என்பது முக்கியம் இல்லை. கூட்டு வட்டியின் மகத்துவத்தை உணர்ந்து நமக்கு சாதகமாக பயன்படுத்தி நமது பணத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். கூட்டு வட்டியின் சக்தியை பயன்படுத்தியே பெரும்பாலானோர் கோடீஸ்வரர் ஆனார்கள். அவர்கள் நம்மை விட புத்திசாலியோ கடுமையாக உழைப்பாளியோ இல்லை. கூட்டு வட்டியின் செயல்பாட்டை புரிந்து கொண்டு பணத்தை அவர்கள் பெருக்கியுள்ளனர்.
கூட்டு வட்டியின் மகத்துவத்தை உணர நமது கண் முன்னே நிஜ வாழ்க்கையில் உள்ள உதாரணம் - வாரன் பஃபெட். பஃபெட்டின் நிகர சொத்து மதிப்பை கூர்ந்து கவனியுங்கள்.
பஃபெட் தனது 11 வயதில் முதன்முதலில் பங்குகளில் முதலீடு செய்தார். பின்னர் அவரது சொத்து மதிப்பு 30 வயதில் முதல் மில்லியன் டாலர், 37 வயதில் 10 மில்லியன் டாலர், 48 வயதில் 100 மில்லியன் டாலர், 54 வயதில் ஒரு பில்லியன் டாலர், 63 வயதில் 10 பில்லியன் டாலர், தனது 87 வது வயதில் 86.6 பில்லியன் ஆக உள்ளது. நீங்கள் இந்த படத்தை கூர்ந்து கவனித்தால் காலம் செல்லச்செல்ல அவரது செல்வம் வளரும் வேகமும் அதகரிப்பதை உணர்வீர்கள். இதுவே கூட்டு வட்டியின் மிகப்பெரிய சக்தியாகும். இதனை நமக்கு சாதகமாக பயன்படுத்தி நம் செல்வதை பெருக்கி கொள்ள வேண்டும்.
கூட்டு வட்டியின் சமன்பாடு:
இதில்
A - முதிர்வு தொகை
P - அசல் தொகை
r - வட்டி விகிதம்
n - முதலீட்டு காலம்
இந்த சமன்பாட்டின்படி அசல் வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு காலம் ஆகிய மூன்றும் முதிர்வுத் தொகையை தீர்மானிக்கின்றன. உதாரணமாக ஒருவர் மாதம் 10 ஆயிரத்தை 10 வருடத்திற்கு 10% வட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறார் என்றால் பத்து வருடம் கழித்து வட்டி 8,14,575.99 ரூபாயையும் சேர்த்து முதிர்வுத்தொகை 20,14,575.99 ரூபாய் ஆகும்.
நம்மில் பலர் பணத்தை பெருக்குவதற்காக வருவாய் அதிகம் தரும் அதே சமயம் மிகவும் ஆபத்து நிறைந்த முதலீடுகளை மேற்கொள்கிறோம். அத்தகைய முதலீட்டில் நம் முதலீட்டுத் தொகையையே இழக்க நேரிடும். வாரன் பஃபெட் கூறியது போல் " முதலீட்டின் முதன்மையான விதி அசல் முதலீட்டை இழக்கக்கூடாது" என்பதுதான். ஒரு முதலீட்டில் முதலீட்டுத் தொகை மற்றம் முதலீட்டு காலம் மட்டுமே நம் கைகளில் உள்ளது. முதலீட்டின் வட்டி விகிதம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நம் கைகளில் இல்லாத ஒன்றை நம்புவதை விட நம் கையில் இருக்கும் முதலீட்டு தொகை மற்றும் முதலீட்டு காலம் ஆகியவற்றை சாதுர்யமாக பயன்படுத்தி நமது செல்வத்தை பெருக்கி கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு முதலீட்டின் முதிர்வுத்தொகை வட்டிவிகிதத்தைவிட முதலீட்டு காலத்தையும் முதலீட்டுத் தொகையையும் பெரிதும் சார்ந்துள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? அதே உதாரணத்தை எடுத்துக்கொண்டு வட்டி, அசல் மற்றும் காலம் ஆகியவற்றை தனித்தனியாக இரட்டிப்பாக்கி கணக்கிடுவோம்.
வட்டி விகித்தை 20% ஆக்கினால் முதிர்வுத்தொகை - 34,43,110.04 ரூபாய் ஆகும்.
முதலீட்டுத் தொகையை மாதம் 20 ஆயிரமாக உயர்த்தினால் முதிர்வுத்தொகை - 40,29,151.98 ரூபாய் ஆகும்.
அதுவே 10 வருடங்களுக்கு மாதம் 10 ஆயிரம் 10% வட்டிக்கு முதலீடு செய்து இன்னும் பத்து வருடம் அதே முதலீட்டுத்தொகையுடன் தொடர்ந்தால் முதிர்வுத்தொகை - 52,25,291.98 ஆகும்.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் முதலீட்டின் லாபத்திற்கு முதலீட்டுக்காலமே மிக முக்கியம். வட்டிவிகிதம் சில சதவிகிதம் மாறுவதால் லாபத்தில் பெரிய மாற்றம் ஏற்படப் போவதில்லை. எனவே அதிக வட்டிக்காக அதிக ஆபத்தான முதலீடுகளில் பணத்தை இழக்காதீர்கள். நம் கையில் உள்ள காலத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிதி சூழ்நிலைக்கு ஏற்ற முதலீடுகளை தேர்வு செய்து முன்னேற வேண்டும்.
மேலும் இந்த கூட்டு வட்டியின் இன்னொரு பரிமானத்தை கவனிக்க வேண்டும். ஒருவர் 10 வருடங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்து மேலும் 10 வருடங்களுக்கு முதலீட்டை மட்டும் தொடர்ந்தால் வரும் தொகை 52,25,291.28 ரூபாய் ஆகும். இன்னொருவர் முதல் 10 வருடங்கள் எதுவும் முதலீடு செய்யாமல் அடுத்த 10 வருடங்களுக்கு மாதம் 20,000 ரூபாய் (முதல் நபரைவிட இரண்டு மடங்காக) முதலீடு செய்தால் வரும் தொகை 40,29,151.98 ரூபாய் ஆகும். முதலீட்டை எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ கூட்டு வட்டியின் சக்தியை அந்த அளவு உபயோகிக்க முடியும்.
எனவே
முதலீட்டை தாமதிக்காமல் உடனே தொடங்குங்கள்.
உங்கள் முதலீட்டில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
வட்டி வருவாயை மறுமுதலீடு செய்யுங்கள்.
அதிக வருவாய்க்காக அதிக ஆபத்தான முதலீடுகளை செய்யாதீர்கள்.
முதலீட்டில் வேகத்தை விட விவேகமே வெற்றியைத் தரும்.
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை மறவாதீர்கள்.
கூட்டு வட்டியை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம்.




கருத்துகள்
கருத்துரையிடுக