டெரி ஸ்மித் யார்? ஃபண்ட்ஸ்மித் பங்கு நிதியின் நிர்வாக அலுவலர். இங்கிலாந்தின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படுபவர். வளர்ச்சி பாதையில் உள்ள மிக குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களில் நெடுங்காலம் முதலீடு செய்வது இவரது பாணி. இவர் தனது முதலீட்டுக் கொள்கைகளை பற்றி அவரது நிதியின் உரிமையாளர் கையேட்டில் விளக்கியுள்ளார்.
டெரி ஸ்மித் முதலீட்டுக் கொள்கைகள்
1. பங்குகளை வாங்கி நெடுநாள் வைத்திருப்போம். அதற்காக பல வருடங்களாக தொடர்ந்து மதிப்பு அதிகரிக்கும் பங்குகளை மட்டுமே வாங்குவோம். அத்தகைய முதலீீடுகள் வருடத்திற்கு ஒன்று கிடைப்பதே அரிது. பரபரப்பு அதிகம் உள்ள நிறவனங்களை தவிர்த்து விடுவோம். அதிக லாபத்திற்காக ஆபத்து நிறைந்த முதலீடுகளை நாங்கள் செய்வதில்லை.
2. நாங்கள் உயர் தரமான வணிகங்களில் மட்டுமே முதலீடு செய்கிறோம். எல்லா பொருளாதார மற்றும் வணிக சுழற்சியிலும் நமது முதலீட்டு செலவிற்கும் (Cost of capital) அதிகமாக லாபம் (Return on capital) தரும் நிறுனங்களே உயர் தர நிறுவனங்கள் ஆகும். அத்தகைய நிறுவனங்கள் வெகு சில மட்டுமே. அவையே மதிப்பை உருவாக்கும். நமது மூலதனத்தை கொண்டு சராசரியை விட அதிக லாபத்தையும், அந்த லாபத்தை பல ஆண்டுகள் பாதுகாத்து மேலும் லாபத்தை வளர்க்கும் வாய்ப்புள்ள நிறுவனங்களையே நாடுகின்றோம். அவையே முதலீடு செய்வதற்கேற்ற உயர் தர நிறுவனங்கள் ஆகும். கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்படும் வெறும் லாபம் மட்டும் அல்ல. லாபத்திற்கு ஈடாக கையில் பணவரவு (Free cash flow) கொண்ட நிறுவனங்களாக இருக்க வேண்டும்.
3. லாபத்தை ஈட்டுவது மட்டுமே போதுமானது இல்லை. லாபத்தை திரும்ப வியாபாரத்தில் முதலீடு செய்து லாபத்தை வளர்க்க வேண்டும். லாப வளர்ச்சி இல்லையென்றால் அது பங்கு முதலீடு அல்ல. கடனை பத்திரத்தை போன்றது. மேலும் வளர்ச்சி எங்கிருந்து வருகிறது என்று ஆராய வேண்டும். ஏனெனில் வியாபாரத்திற்கான மூலதனத்தை அதிகரித்தால் லாபமும் அதிகரிக்கலாம். அப்படி வளர்ச்சிக்காக மேலும் மேலும் முதலீட்டை நாடும் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏற்றவை அல்ல. அப்படி புதிய முதலீட்டை நம்பியில்லாமல் வரும் லாபத்தை முதலீடு செய்து நீண்ட நாள் வளரும் வாய்ப்புள்ள நிறுவனங்களிலே முதலீடு செய்கிறோம். சந்தைப்படுத்தும் பொருளின் விலையேற்றத்தினால் வரும் லாப வளர்ச்சி நிலையானதில்லை. ஏனெனில் விலையேற்றத்திற்கு எல்லை உண்டு. வருடாவருடம் அதிக பொருட்களை விற்று வரும் லாப வளர்ச்சியே நிலையான வளர்ச்சி.
4. வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக திரும்ப திரும்ப சிறிய பொருட்களை வணிகம் செய்யும் நிறுவனங்களே அத்தகைய லாபத்தை சம்பாதிக்கும். சுழற்சி வணிகங்களை (பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப மாறுபடும் நிறுவனங்கள்) விட தினந்தோறும் சின்னச்சின்ன பொருட்களை விற்கும் நிறுவங்களின் லாபம் நிலையாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யாத நிறுவனங்கள், எப்போதாவது உபயோகிக்கும் பொருட்களை விற்கும் நிறுவனங்கள், பிற நிறுவனங்களுக்கு மூலதன கருவிகளை (Capital goods) விற்கும் நிறுவனங்கள் ஆகியவற்றை நாங்கள் தவிர்த்து விடுவோம். பொருளாதார மந்தநிலையின் போது நிறுவனங்கள் கருவிகள் வாங்குவதை தள்ளிப்போடலாம். பழைய கருவிகளை உபயோகப்படுத்தலாம். அந்நிறுவனங்கள் கருவிகளை பேரம் பேசி விலையைக் குறைப்பதற்காகவே சிலரை நியமிக்கும். பொருளாதார வீழ்ச்சியின் போது வாடிக்கையாளர்கள் நீடித்து உழைக்கும் பொருட்கள் (Consumer durables) வாங்குவதை தள்ளிப்போடலாம். ஆனால் தினமும் உபயோகிக்கும் உணவு மற்றும் சுகாதார பொருட்களை (Consumer staples) வாங்கியே ஆக வேண்டும். அத்தகைய நிறுவனங்கள் பல ஆண்டுகள் அதிக லாபத்தை ஈட்ட முடியும். மேலும் பிற நிறுவனங்களுக்கு விற்பது எளிதல்ல. வாடிக்கையாளர்களுக்கு எளிதில் விற்கலாம். அவர்களுக்கு பிராண்ட் விசுவாசம் உண்டு. ஆனால் விலையை பேரம் பேச வாய்ப்பு இல்லை.
5. தொட்டு உணர முடியாத சொத்துக்களையும் (Intangible assets) காப்பி எடுக்க முடியாத வியாபார உத்தியையும் உடைய வணிகங்களில் முதலீடு செய்வோம். இது உங்களுக்கு எதிமறையாக தோன்றலாம். ஒரு வணிகம் மிக அதிக லாபம் தருமானால் போட்டி நிறுவனங்கள் உருவாகி அந்த வணிகத்தின் லாபம் சராசரியை நோக்கி குறையும். இதையே சராசரிக்கு மீளும் விதி (Reversion to mean) என்கிறார்கள். அதனால் காப்பி அடிக்க முடியாத உத்தியை உடைய வணிகங்கள் நெடுநாட்களுக்கு தங்களுடைய லாபத்தை பாதுகாக்கும். அத்தகைய வணிகங்களிலேயே நாங்கள் முதலீடு செய்வோம். காப்புரிமை, பிராண்டுகள், வர்த்தக முத்திரை, விநியோக உரிமை, சந்தையில் ஆதிக்க நிலை மற்றும் பதிப்புரிமை ஆகியவை தொட்டு உணர முடியாத சொத்துக்கள் ஆகும். இவைகளை பிற நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்தாலும் எளிதில் உருவாக்க முடியாது. பிறர் உணரக்கூடிய சொத்துக்களை (Tangible assets) எந்த நிறுவனத்தாலும் முதலீடு செய்து உருவாக்க முடியும்.
6. பெரிய முட்டாள் கோட்பாட்டை (Greater fool theory) நாங்கள் நம்பவில்லை. அதிக விலையில் வர்த்தகம் ஆகும் வணிகங்களை நம்மைவிட பெரிய முட்டாளிடம் விற்கலாம் என்று எண்ணி நாங்கள் வாங்குவதில்லை.
7. கடனைக் கொண்டு இயங்கும் நிறவனங்களை வாங்குவதில்லை. கடன் பெரிதும் இல்லாத நிறுவனங்களையே வாங்குகிறோம். உதாரணமாக வங்கிகள், முதலீட்டு வங்கிகள் ஆகியவை கடனையும் வைப்புத்தொகையும் நம்பியே வர்த்தகம் செய்கின்றன. பொருளாதார மந்தநிலையில் பணப்புழக்கம் குறையும்போது அந்நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மேலும் கடனை விடுத்து கணக்கிட்டால் அவற்றின் லாபம் குறைவாகவே இருக்கும்.
8. சில துறைகளில் நாங்கள் முதலீடு செய்வதில்லை - வானூர்தி, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், commodities. அவற்றை பற்றி நாங்கள் தெரிந்து கொள்வதில்லை. இத்தகைய துறைகளில் முதலீட்டின் மீது வரும் லாபம் (Return on capital) முதலீட்டுச் செலவைவிட (Cost of capital) குறைவாக இருப்பதால் அவை மதிப்பை உருவாக்குவதில்லை.
9. நீண்ட நாள் மாற்றம் அடையாமல் நிலைத்து நிற்கும் வணிகங்களிலேயே முதலீடு செய்ய நினைக்கிறோம். உதாரணமாக லிஃப்ட் நிறுவனங்கள். 1850ல் ஒட்டிஸ் அவர்கள் கண்டுபிடித்ததிலிருந்து தொழில் நுட்பம் மாறவில்லை. பல ஆண்டுகளுக்கு மாறப்போவதும் இல்லை. இவை நெடுநாட்களுக்கு நல்ல லாபத்தை தரும். அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கருவிகளை நிறுவும் நிறவனங்கள் பெருமளவு லாபத்தை பராமரிப்பு கட்டணத்திலிருந்து பெறுகின்றன. உதாரணமாக லிஃப்ட் நிறுவனங்கள். We also like franchisers. அதேபோல் வியாபார உரிமையை (Franchise) விற்கும் நிறுவனங்கள். உதாரணமாக டாமினோஸ் பிட்சா. அவை அதிக முதலீடு செய்வதில்லை. வியாபார உரிமையை பெறுபவர் முதலீடு செய்ய வேண்டும். ராயல்டி தொகயையும் செலுத்த வேண்டும்.
10. புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பாதிக்கப்படும் வணிகங்களில் முதலீடு செய்வதில்லை அது உலகையே மாற்றக்கூடிய வல்லமை உள்ளதாயினும் கூட. பல முதலீட்டாளர்கள் இத்தகைய கண்டுபிடிப்புகளை விரும்பினாலும் அவை பெரும்பாலும் நாளடைவில் வணிகங்களுக்கு மதிப்பை கூட்டுவதில்லை. அத்தகைய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு நிறுவனங்களில் சிலர் லாபமடைந்தாலும் பெரும்பாலானோர் தங்கள் முதலீட்டை இழந்துள்ளனர். உதாரணமாக 1903 இல் ரைட் சகோதரர்கள் வானூர்தியை கண்டுபிடித்ததிருந்து இன்றுவரை வானூர்தி துறையின் நிகர லாபம் பூஜ்யம். உலகம் முழுவதும் பயணிக்கும் விதத்தை மாற்றியமைத்த தொழில் நுட்பமாயினும் முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்ததில்லை.
11. நிறுவன பங்குகளின் விலை சாதகமாக இருக்கும் போது மட்டும்தான் முதலீடு செய்வோம். உயர்தர நிறுவனங்களில் முதலீடு செய்தும் அதிக விலை கொடுத்ததால் பல முதலீட்டாளர்கள் லாபமடையவில்லை.
12. நாங்கள் சந்தையை நேரமிடுவதில்லை. அதற்கான திறனும் எங்களுக்கு இல்லை. வேறு எவருக்கும் அத்திறன் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பலர் அம்முயற்சியை கைவிடவில்லை. அதனாலேயே பொருளாதார நிலையை சார்ந்த நிறவனங்களில் முதலீடு செய்வதில்லை. அதற்கு சந்தையை நேரமிடும் திறன் தேவை.
13. நாங்கள் தேவைக்கும் அதிகமான நிறுவனங்களில் முதலீடு செய்வதில்லை. எங்களுடைய கடுமையான அளவுகோலுக்கு 20-30 நிறுவனங்களே பொருந்தும். குறைந்த அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்ய நாங்கள் அஞ்சுவதில்லை. 20 நிறுவனங்களுக்கு மேல் முதலீடு செய்வதால் எவ்வித பயனும் இல்லை. பெரும்பான்மையான நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் எந்த துறையில் இயங்குகிறார்கள் என்பதைக் கொண்டே தவிர்த்து விடுவோம்.
14. மதிப்பு முதலீட்டில் (value investing) ஒரு வணிகத்தின் விலையும் மதிப்பும் ஒன்றானால் அப்பங்கை விற்று வேறொரு வணிகத்தை முதலீடு செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் எங்கள் செயல்முறையில் பல வருடங்கள் மதிப்பு கூடும் நிறுவனங்களில் முதலீடு செய்வதால் புதிதாக நிறவனங்களை தேடும் தேவை இல்லை; அதனால் பரிவர்த்தனை செலவுகளும் குறைவு. அந்நிறுவனங்களின் லாபம் கூட்டு வட்டி முறையில் அதிகரிக்கும். அந்நிறுவனங்களுக்கு பங்குச்சந்தையைவிட நான்கு மடங்கு அதிக விலை கொடுத்தாலும் முப்பது ஆண்டுகளில் அவை நல்ல லாபம் தரும்.
15. நாங்கள் நிறுவனங்களின் மேலாண்மை அதிகாரிகளை விட நிதிக்கணக்குகளையே அதிகம் நம்புகிறோம். தொடர்ச்சியாக அதிக வருவாய் ஈட்டும் நிறவனங்களை அவற்றின் நிதிக்கணக்கை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறோம்.
16. நாங்கள் சந்தை குறியீட்டுடன் எங்கள் முதலீட்டை ஒப்பிடுவதில்லை. ஒரு வருடம் என்பது உலகம் சூரியனை சுற்றி வருவதற்காகும் நேரம் மட்டுமே. வருடத்திற்கும் வியாபாரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நீண்ட காலத்திற்கு முக்கியம் அளியுங்கள். மேலும் நீண்டகாலத்திற்கு தேவைப்படாத பணத்தை மட்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள். சந்தை சுழற்சியில் பங்குகளின் விலை குறைந்தாலும் அவற்றின் உண்மையான மதிப்பு குறையவில்லை என்றால் நாங்கள் கவலைப்படுவதில்லை.
17. உங்கள் முதலீட்டு செயல்திறனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நீங்களே தான். பல முதலீட்டாளர்கள் பேராசை மற்றும் பயத்தினால் பங்குகளை உச்சத்தில் வாங்கி அதல பாதாள விலையில் விற்பர். மற்றவர்கள் பயப்படும் போது வாங்கவும், பேராசைப்படும்போது விற்கவும் உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஒழுக்கம் தேவை.
18. பொதுவாக நீண்ட கால முதலீட்டாளர்களின் சந்தை செயல்பாடுகள் அதிகரிக்க லாபம் குறையும். அவ்வாறு சந்தையில் குறைந்த செயல்பாட்டிற்கு முதலில் நல்ல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி நீண்ட காலம் வைத்திருக்க வேண்டும். இரண்டும் சொல்வதைவிட செய்வது கடினம்.
இறுதியாக எளிய மூன்றுபடி உத்தி -
நல்ல நிறுவனங்களை வாங்குங்கள்.
அதிக விலை கொடுக்காதீர்.
வேறெதுவும் செய்ய வேண்டாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக