சிறுவயது முதல் பணம்தான் எல்லா தீமைகளுக்கும் மூலகாரணம் என்று நம் சமூகம் சொல்லி வளர்க்கிறது. பணத்தை பற்றி பேசுவது ஆசைப்படுவது எல்லாம் தவறு என்று நம் மனதில் திணிக்கப்படுகிறது. மற்றவரை ஏய்த்து மோசடி செய்தால் மட்டுமே செல்வந்தராக முடியும் என்றும் நியாயமான முறையில் பணக்காரராக முடியாது என்றும் நாமும் நம்புகிறோம். இது உண்மையா?
காற்றை பற்றி சிந்தியுங்கள். இவ்வுலகில் ஏராளம் உள்ளது. ஒவ்வொரு நொடியும் நாம் காற்றை சுவாசிக்கின்றோம். ஆனால். நமக்கு காற்று எளிதில் கிடைப்பதால் அதை பற்றி எப்போதும் சிந்திப்பதில்லை. அதுவே நீங்கள் நீரில் மூழ்கினால் காற்றை பற்றி மட்டுமே சிந்திப்பீர்கள். பணமும் அதை போலத்தான். நம்முடைய தேவைகளுக்கான பணம் நம்மிடம் இல்லாதபோது பணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க நேரிடும். அந்த நேரத்தில் பணமே நமது மனதை முழுவதும் ஆக்கிரமிக்கிறது. பணமின்மை மற்ற விடயங்களில் கவனம் செலுத்துவதற்கான திறனை கட்டுப்படுத்துகிறது. பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தும் சுதந்திரத்தை பணம் நமக்கு அளிக்கிறது.
பொருள் சார்ந்த இந்த உலகில் பணம் உங்களுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது. பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை தரப்போவதில்லை. உங்கள் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க போவதில்லை. உங்கள் வெளிப்புற பிரச்சினைகளை மட்டும் தீர்க்கும். ஆராய்ந்து பார்த்தால் நமக்காக செல்வத்தை உருவாக்குவது நியாயமான விடயமே.
Money can't buy
happiness. But lack of money certainly buys misery - Daniel kahneman.
பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் பணப் பற்றாக்குறை நிச்சயமாக துயரத்தை வாங்கும் - டேனியல் கேன்மென்.
இது முற்றிலும் உண்மை. பணம் மகிழ்ச்சியை தராது. பணம் பணப் பிரச்சனைகளை மட்டுமே தீர்க்கும். பணம் உங்கள் பாதுகாப்பின்மைகளை தீர்க்காது. பணத்தை கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது. இரண்டுக்கும் முடிச்சு போடாதீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது ஒரு முடிவு அல்ல. மகிழ்ச்சி என்பது ஒரு வாழ்க்கை பயணம்.
சரி எவ்வளவு பணம் போதுமானது? இந்த கேள்விக்கு நீங்கள் மட்டுமே பதில் அளிக்க முடியும். எது தேவை எது ஆசை என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள். ஆசைகளுக்கு அளவே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மரணப்படுக்கையில் நாம் சம்பாதித்த பணத்தை பற்றி ஒருபோதும் நினைக்கப்போவதில்லை. நண்பர்கள், உறவினர்களுடன் சந்தோஷமாக கழித்த நிமிடங்கள், பிறருக்கு உதவிய தருணங்கள் இவையே வாழ்வின் இறுதியில் மனநிறைவைத் தரும்.
பணம் என்பது ஒரு முடிவுக்கான வழிமுறை ஆகும். அதுவே ஒரு முடிவல்ல. திருப்தியான வாழ்க்கை வாழ்வதே மகிழ்ச்சிக்கான திறவுகோல். வாரன் பஃபெட் கூறுகையில் நம்முடைய எண்ணத்திற்கேற்ப வாழ வேண்டும்; பிறர் என்ன நினைக்கிறார்கள் எனணக் கூடாது. பிறரின் பார்வைக்காக நாம் வாழ்பவர் ஒருபோதும் செல்வந்தராக முடியாது. எனவே எப்படி பணக்காரன் ஆவது என்று சிந்திப்பதற்கு முன் எப்படி வாழ வேண்டும் என்று சிந்தியுங்கள்.
அதிக பணம் சம்பாதித்தால் நிறைய மகிழ்ச்சி கிடைக்கும் என்பது முட்டாள்தனம். பணத்தை பற்றி மட்டுமே நினைப்பதைக் காட்டிலும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடயங்களை பற்றி சிந்தியுங்கள். பிறகு அந்த விடயங்களில் பங்கேற்க போதுமான பணத்தை மட்டும் சம்பாதியுங்கள். அதற்கு மேல் பணத்தை சம்பாதிப்பது நமக்கு உள்ள புதிப்பிக்க முடியாத வளத்தை வீணடிப்பதாகும் - அது இந்த உலகத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள நேரம். உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் நியாயமான ஆசைகளுக்கும் வேண்டிய பணம் உங்களிடம் இருந்தால் அதற்கு மேல் பணம் சம்பாதிக்க முயல்வது மேலும் கவலையைத் தருமொழிய அவற்றை போக்காது.
செல்வம் பூஜ்ய கணக்கு விளையாட்டு அல்ல. பூஜ்ய தொகை கணக்கு என்றால் இவ்வுலகில் குறிப்பிட்ட அளவே செல்வம் உள்ளது; அதனால் ஒருவர் பணக்காரன் ஆக இன்னொருவரிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே பூஜ்ய தொகை கணக்கு. ஆனால் அது உண்மை இல்லை. இந்த உலகில் உள்ள செல்வம் அனைத்தும் அளவிடக்கூடியவை மற்றும் நிலையான எண்ணிக்கையிலானவை என்ற தவறான பார்வை இங்கு பரவலாக உள்ளது. உலகில் செல்வம் நிலையானது அல்ல. காலப்போக்கில் செல்வம் தொடர்ந்து உருவாக்கபட்டும் அழிக்கப்பட்டும் வருகிறது. இங்கு ஒருவரின் ஆதாயம் இன்னொருவரின் இழப்பு அல்ல. செல்வம் எல்லோரும் வெற்றி பெறக்கூடிய விளையாட்டு ஆகும்.
இன்னொருவரை ஏமாற்றி மோசடி செய்தால்தான் பணக்காரனாக முடியும் என நம் சமூகம் நமக்கு சொல்லி வளர்க்கின்றது. பணக்காரர்கள் மோசமானவர்கள். அதனால் பணத்தாசை கொள்ள வேண்டாம் என நம்மை வளர்க்கிறார்கள். உண்மையில் பணம் தவறானதோ தீமையானதோ இல்லை. பணம் நடுநிலையானது. நேர்மையான வழியில் சட்டத்திற்குட்பட்டு பெரும் செல்வத்தை உருவாக்க முடியும்.
எல்லா மனிதர்களும் தங்களுக்குள் பிறரை பாதிக்கக்கூடிய திறமைகளை இயற்கையிலேயே கொண்டுள்ளனர். அந்த திறமையை கொண்டு மனித குலத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முயல வேண்டும். நமது எளிமையான செயல்களின் மூலம் பிறரின் வாழ்க்கையை மேம்படுத்தி நம் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் வெற்றிகனமானதாகவும் அமையும் வாய்ப்பை அதிகரிக்க முடியும்.
பணம் என்பது ஒப்பீட்டுச் சொல். இருக்க வீடு இல்லாதவர்களுக்கு குடிசையில் இருப்பவர் பணக்காரர். குடிசையில் இருப்பவருக்கு கான்கிரீட் வீட்டில் வசிப்பவர் பணக்காரர். அவருக்கு இன்னொருவர் பணக்காரர். இதற்கு முடிவே இல்லை. எவ்வளவு பணம் உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவை என்பதை நீங்கள்தான் வரையறுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் எங்கும் நகராத டிரெட்மில்லில் ஒடுவதைப்போல் நிம்மதி இல்லாமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
எவ்வளவு தேவை என்பது உங்கள் பார்வையைப் பொறுத்தது. பணம் அதிகம் இருப்பதைவிட உங்கள் விருப்பத்திற்கேற்ப செலவிட நேரம் இருப்பதே முக்கியம். பணத்தால் நிரந்தரமான மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் பணம் உங்களுக்கு சுதந்திரத்தை வாங்கித் தரும். அந்த சுதந்திரம் நிலையானது.
பணம் உண்மையிலேயே எல்லா தீமைகளுக்கும் மூல காரணமா? இல்லை பணத்தின் மீதான எல்லையற்ற காதலே எல்லா தீமைகளுக்கும் மூல காரணம்.

கருத்துகள்
கருத்துரையிடுக