பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோசாகி
1997 இல் அமெரிக்க முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி என்பவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம் பணத்தை பற்றிய மக்களின் எண்ணங்களை மாற்றி அமைத்தது. அவரது பணத்தை பற்றிய புரிதல் வழக்கமான சிந்தனைக்கு எதிரானது.
பணக்கார தந்தை ஏழைத் தந்தை - பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை பற்றி நடுத்தர மற்றும் ஏழைகள் சொல்லிக்கொடுக்காத எதை கற்றுக் கொடுக்கிறார்கள்?
ராபர்ட்டுக்கு இரண்டு அப்பாக்கள். ஒருவர் பெற்றவர். அவரே ஏழைத்தந்தை. இன்னொருவர் நண்பனின் அப்பா. பணவிடயங்களில் இவரது ஆசான். இவரே பணக்கார தந்தை. இவ்விரு தந்தைகளுக்கும் பணத்தை பற்றிய எதிர்எதிர் புரிதல்கள் சிந்தனைகள்.
ஏழை தந்தை பல்வேறு கல்லூரிகளில் நன்கு படித்தவர். இன்னொருவர் 8 வது முடிக்கவில்லை. அவரது தந்தை கல்லூரியில் பணிபரிகிறார். இன்னொருவர் தொழில் முனைவோர். இருவரும் தம் துறைகளில் திறமையானவர்கள், உழைப்பாளிகள், நல்ல வருவாய் உள்ளவர்கள். ஆயினும் ஏழைத்தந்தை ஏழையாகவே கடனில் இறந்தார். இன்னொருவர் ஹவாய் தீவின் மிகப்பெரிய பணக்காரராக இறந்தார். எப்படி? இருவருக்குமான பணத்தை பற்றிய புரிதல் வேறு.
ஒருவர் நன்றாக படித்து நல்ல வேலைக்கு போ என்பார். இன்னொருவர் நன்றாக படித்து நல்ல நிறுவனங்களை வாங்க வேண்டும் என்பார். ஒருவர் என்னால் அதை வாங்க முடியாது என்பார். மற்றவர் நான் அதை எப்படி வாங்குவது என்று யோசிப்பார். ஒருவர் பணத்தை பற்றி பேசுவதே தவறு என்பார். மற்றவர் பணம் வியாபாரத்தை பற்றி விவாதிப்பார். ஒருவர் ரிஸ்க் வேண்டாம்; பாதுகாப்பு முக்கியம் என்பார். இன்னொருவர் ரிஸ்க்கை நிர்வகிக்க கற்றுக்கொள் என்பார். ஒருவர் வீடே பெரிய முதலீடு (asset) என்பார். மற்றவர் வீடு பெரிய கடன் (liability) என்பார். ஒருவர் ஒய்வூதியத்துக்காகவும் மருத்துவ செலவுகளுக்கும் அரசை நம்பி இருப்பார். மற்றவர் நிதி விடயங்களில் தன்னையே நம்பி இருப்பார். இவை எல்லாம் அரசின் கடமை என்பார் ஏழைத்தந்தை. இன்னொருவர் இந்த உரிமை மனநிலை நிதிக்காக அடுத்தவரை நம்பி இருக்கும் மக்களை உருவாக்குகிறது என்பார். ஒருவர் வேலைக்கான விண்ணப்பங்களை எழுத கற்றுக்கொள் என்பார். இன்னொருவர் வியாபார மற்றும் நிதி திட்டங்களை எழுத கற்றுக்கொள் என்பார். ஒருவர் நான் பணக்காரனாக முடியாது என்பார். மற்றவர் பணமில்லை என்றாலும் நான் பணக்காரன் என்பார். பணமின்மை தற்காலிகமானது. ஏழ்மை நிலையானது என்பார். ஒருவர் எனக்கு பணத்தின் மீது எனக்கு ஆசை இல்லை என்பார். மற்றவர் பணத்திற்கு வல்லமை உண்டு, பணம் செயல்படும் முறைகளை கற்று பணத்தை நமக்காக உழைக்க வைக்க வேண்டும் என்பார். தன்னுடைய 9வது வயதில் இருந்து பணக்கார தந்தையிடம் பணத்தை பற்றிய விடயங்களை கற்றறிந்தார்.
அத்தியாயம் 1
ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை. பணத்தை அவர்களுக்காக வேலை செய்ய வைக்கிறார்கள்.
வாழ்க்கை நேரடியாக பேசுவதில்லை. நம்மை சுற்றிலும் தள்ளிக் கொண்டே இருக்கும். சிலர் விலகி விடுகின்றனர். சிலர் எதிர்த்து சண்டையிடுகின்றனர். சிலர் பாடம் கற்றுக்கொண்டு நகரந்து விடுகின்றனர். வாழ்க்கை நம்மை உந்தித்தள்ளும்போது பதிய பாடங்களை கற்று கொள்ள வேண்டும்.
ஏழை தந்தையைப் போல சிலர் வாழ்க்கைத் தள்ளலுக்கு அடிபணிந்து விடுகின்றனர். ரிஸ்க் எடுக்க பயப்படுகின்றனர். வெற்றியைவிட தோல்வி பயமே மேலோங்கி நிற்கிறது. ஆதலால் பாதுகாப்பாக வாழவே நினைக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை தத்துவம் நன்றாக படி; நல்ல மதிப்பெண் பெறு; நல்ல ஊதியம் தரும் வேலைக்கு செல். ஆனால் அவர்களுக்கு புரிவதில்லை அதிக பணம் பிரச்சினைகளை தீர்க்காது. அதிக பணம் அதிக கடனில் முடியும். பணமின்மை பயமே மேலும் கடுமையாக உழைக்க உந்தும். பணத்தால் வாங்க கூடிய ஆடம்பரங்கள் ஆசையை தூண்டும். அவர்கள் அந்த ஆசையினாலும் பயத்தினாலும் அவர்களுக்கே ஒரு விலையை நிர்ணயிக்கிறார்கள். அங்கு ஒரு மாதிரி உருவாகிறது. வேலைக்கு செல்வது. செலவு செய்வது. அதற்கு பெயர் எலிப்பந்தயம்.
பெரும்பாலானவர்களின் வாழ்க்கை பயத்திற்கும் ஆசைக்கும் நடுவில் ஊசலாடுகிறது. அதனால் பணம் அவர்கள் மனதை ஆட்கொள்கிறது. அதிக பணம் கிடைக்க அதிகம் உழைப்பது; ஆடம்பர செலவு செய்து எலிப்பந்தயத்தில் ஒடுவது. அந்த பொறியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
பலர் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேலைக்கு ஓடுவதை பார்த்திருப்பீர்கள். பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக. ஆனால் அந்த மகிழ்ச்சி குறுகியகாலமே நிலைக்கும். மீண்டும் அதிக பணம் தேவைப்படும். அதனால் பொருளால் வரும் மகிழ்ச்சிக்காக வேலைக்கு செல்வார்கள். ஆனால் வேலை என்பது நீண்டகால பணப்பிரச்சனைக்கான குறுகியகால தீர்வே.
சில பணக்காரர்கள் பணத்தை இழக்கும் பயத்திலேயே இருப்பார்கள். பணத்தை வெருப்து போன்று பணத்தை அளவுகடந்து விரும்புவதும் ஆபத்தானது. பலர் எனக்கு பணத்தாசை இல்லை என்பர்; ஆனால் பணத்திற்காக பலமணி நேரம் தினமும் உழைப்பார்கள்.
ஒரு கேரட்டை கழுதையின்முன் காட்டி இழுக்கச் செய்வான் அக்கழுதையின் உரிமையாளன். அப்படியே அவன் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வான். கழுதையோ ஒரு மாயையான கேரட்டை துரத்திக் கொண்டு செல்லும். பணம் தான் அந்த கேரட். பணம்தான் நாம் துரத்தும் அந்த மாயை. அந்த பொறியில் இருந்து வெளியே வாருங்கள். பணம் உங்கள் வாழ்க்கையை நடத்த அனுமதிக்காதீர்கள். பணத்தை பற்றிய அறிவின்மை பயத்திற்கும் ஆசைக்கும் வழிவகுக்கிறது.
பணம் தரும் பொருட்களினால் வரும் மகிழ்ச்சிக்காக வேலை செய்வது கொடுமையானது. ஊதியத்தை சார்ந்து வாழ்வது வாழ்க்கையே அல்ல. ஒரு வேலை நம் வாழ்க்கையை பூர்த்தி அடைய வைக்கும் என்பது பொய்.
அத்தியாயம் 2
சொத்திற்கும் பொறுப்பிற்குமான (கடன்) வித்தியாசத்தை உணர்ந்து சொத்துக்களை வாங்குங்கள்.
சொத்துக்களை வாங்குவது மரத்தை நடுவது போன்றது. சில வருடங்கள் தண்ணீர் விட்டு பாதுகாக்க வேண்டும். அது வளந்ததும் உங்கள் பராமரிப்பு தேவைப்படாது. மேலும் உங்களுக்கு நிழலையும் காய்கனிகளையும் தரும்.
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு உங்களுக்காக உழைப்பதற்காக வைத்திருக்கிறீர்கள் என்பதே முக்கியம். லாட்டரியில் வென்ற பலர் சில வருடங்களிலேயே ஏழை ஆகிவிடுவதும் இதனால் தான்.
வேகமாக மாறி வரும் உலக சூழ்நிலையில் நாம் திறந்த மனதுடன் வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பணக்காரன் ஆக பணத்தை பற்றிய அறிவு வேண்டும். பணத்தை பற்றி பள்ளியில் சொல்லித் தருவதில்லை.
சொத்திற்கும் கடனிற்கும் (Liability - பொறுப்பு) வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் சட்டைப்பையில் பணத்தை வைப்பவை எல்லாம் சொத்துக்கள். உங்கள் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுப்பவை எல்லாம் கடன்கள் அல்லது பொறுப்புகள் ஆகும். பணக்காரர்கள் சொத்துக்களை வாங்குகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் சொத்து என்றெண்ணி கடன்களை வாங்குகின்றனர்.
மூன்று பேரின் பணப்புழக்கத்தை பார்க்கலாம். ஏழைகளுக்கு வருமானம் செலவுகளுக்கே சரியாகிவிடும். நடுத்தர வர்க்கத்தினர் செலவுபோக உள்ள வருமானத்தை கடன்களாக வாங்கி குவிக்கின்றனர். உதாரணமாக வங்கி கடன் மூலம் கார் மற்றும் வீடு. இவர்களுக்கு வருமானம் அதிகரித்தால் செலவுகளும் கடன்களும் அதிகரிக்கும். பணக்காரர்கள் வருமானத்தில் சொத்துக்களை வாங்குகின்றனர். அந்த சொத்துக்கள் தரும் ஊதியத்தில் மேலும் சொத்துக்கள் வாங்குகின்றனர்.
சொந்த உபயோகத்திற்கான வீடு சொத்து அல்ல. வரி, கடன் ஈ.எம்.ஐ, ஆண்டுக்கு ஆண்டு மதிப்பு குறைவது, வருமானம் தராமை போன்றவையால் வீடு நமக்கு ஒரு கடனே. பணக்காரர்கள் சொத்துக்களை வாங்கி அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்து வீட்டை வாங்குவார்கள்.
எதனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்? அவர்கள் வருமானத்தை வைத்து சொத்துக்களை வாங்குகின்றனர். அதிலிருந்து வரும் வருமானத்திற்கு கீழ் செலவு செய்து மிச்சத்தில் மேலும் சொத்துக்கள் வாங்குகின்றனர். அதனால் அவர்கள் வருமானம் மேலும் வளர்கிறது. மேலும் பணக்காரர் ஆகின்றனர்.
நடுத்தர வர்க்கத்தினர் கம்பெனிக்கு வேலை செய்து வரும் வருமானத்தில் அரசுக்கு வரியும் கட்டி செலவு போக கடனையும் வாங்கி வங்கிக்காக உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.
செல்வம் என்பது எந்த வேலையும் செய்யாமல் சொத்திலிருந்து வரும் வருமானத்தில் எவ்வளவு காலம் கழிக்க முடியும் என்பதே. உங்கள் சொத்துக்கள் உங்களுக்காக எவ்வளவு உழைக்கின்றன என்பதே உண்மையான செல்வம். சொத்திலிருந்து வரும் வருமானம் செலவைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
பணக்காரர்கள் சொத்துக்களை வாங்குகின்றனர். ஏழைகளுக்கு வருமானத்தை விட அதிகமாக செலவுகள் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் சொத்து என்று எண்ணி கடன்களை வாங்குகின்றனர்.
அத்தியாயம் 3
பணக்காரர்கள் சொத்துக்களின் மீது கவனம் செலுத்துவர். மற்றவர்கள் வருமானத்தின் மீது கவனம் செலுத்துவர்.
நாம் வாழ்நாள் முழுவதும் வேறொருவரின் வியாபாரத்திற்காக உழைத்து அவரை பணக்காரர் ஆக்குகிறோம். நிதிரீதியாக பாதுகாப்பு வேண்டுமெனில் நாம் நமக்கென ஒரு வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும். வேறொருவருக்காக உழைப்பதால் நிதிரீதியாக பலர் போராட வேண்டி இருக்கிறது.
உங்கள் வேலையை செய்யுங்கள். அதேசமயம் சொத்துக்களை வாங்குங்கள். பணப்புழக்கம் உள்ள சொத்துக்கள். செலவுகளையும் கடனையும் குறையுங்கள். பொறுமையாக சொத்துக்களை குவியுங்கள்.
சொத்துக்கள் யாவை? நம் நேரம் தேவைப்படாத வியாபாரம், பங்குகள், கடன்பத்திரங்கள், வருமானம் தரும் நிலம்/வீடு, ராயல்டி தரும் புத்தகங்கள், இசை, பேடன்ட்; சந்தைப்படுத்தக்கூடிய மதிப்பைத் தரும் எல்லாம்- வலைப்பதிவு, யுடியூப் போன்றவை.
ஒரு ரூபாய் சொத்தாக மாறினால் அன்றிலிருந்து அது உங்கள் வேலைக்காரன் ஆகிவிடுகிறது. 24 மணிநேரமும் பல தலைமுறைக்கும் உழைக்கும். பணக்காரர்கள் கடைசியில் ஆடம்பரங்களை வாங்குவார்கள். மற்றவர்கள் முதலில் வாங்குவார்கள்.
அதிகாரம் 4
ஆரம்ப ஆண்டுகளில் அரசாங்கங்கள் போர்க்காலங்களில் மட்டுமே மக்களுக்கு வரியிட்டனர். காலப்போக்கில் பணக்காரர்களிடமிருந்து வரியைப் பெற்று மற்றவர்களுக்கு பிரித்து தருகிறோம் என்கிற ராபின்ஹுட் கதையைச் சொல்லி வரியை நிரந்தரமாக ஆக்கினர். பாமர மக்களும் அதற்கு சம்மதித்தனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் வரிகள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழைகளையுமே அதிகம் பாதிக்கிறது. பணக்காரர்கள் வரியை குறைப்பதற்காக ஒரு வழியை கண்டறிந்தனர். அதுதான் நிறுவனங்கள். ஏனெனில் நிறுவனங்கள் தனி மனிதர்களைவிட குறைவான வரி செலுத்துகிறார்கள். மேலும் வேலை செய்யும் ஒருவருக்கு வரியை கழித்துவிட்டு மிச்சத்தைதான் கையில் கொடுப்பார்கள். ஆனால் நிறுவனங்கள் எல்லா செலவுகள் போக மிச்ச வருமானத்தில் கடைசியில் வரி கட்டுகிறார்கள்.
அத்தியாயம் 5
நிஜ வாழ்வில் முன்னேறுவது புத்திசாலிகள் அல்ல மாறாக தைரியமானவர்களே. நிதி நுண்ணறிவை வளர்த்து கொள்ளுங்கள். அது பல வழிகளை காட்டும். உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள்.
பணம் உண்மையானது இல்லை. ஏழைகள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். பணக்காரர்கள் பணத்தை உருவாக்குகிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிந்தால் எதுவும் சூதாட்டம் இல்லை. உங்கள் சொத்துக்களை பெருக்குங்கள். பெரிய வாய்ப்புகளை கண்களால் அல்ல உங்கள் மனத்தால் கண்டுபிடியுங்கள். எல்லோரும் விட்டுவிட்ட வாய்ப்பை கண்டு பிடியுங்கள். புத்திசாலிகளை துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு எவையெல்லாம் தெரிகிறதோ அவை உங்கள் மிகப்பெரிய சொத்து. உங்களுக்கு தெரியாதவை எல்லாம் மிகப்பெரிய ரிஸ்க். எப்போதும் ரிஸ்க் உள்ளது. ரிஸ்க்கை நிர்வகிக்க பழகுங்கள். ஒடி ஒளியாதீர்கள்.
அத்தியாயம் 6
கற்றுக்கொள்வதற்காக வேலை செய்யுங்கள். பணத்திற்காக அல்ல. சம்பள வேலை செய்பவர்கள் தங்களை வெளியேற்ற முடியாத அளவுக்கு வேலை செய்வர். அவர்களின் முதலாளி அவர்கள் வெளியேற முடியாத அளவுக்கு சம்பளம் கொடுப்பார்கள். பணப்புழக்கம், வியாபார நுணுக்கம், மனித மேலான்மை முதலியவற்றை கற்று கொள்ளுங்கள்.
அத்தியாயம் 7
பயத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதே ஏழைக்கும் பணக்காரர்களுக்குமான வித்தியாசம் ஆகும். நிதிரீதியாக பலர் தோல்வி அடைய காரணம் பணக்காரராகும் சந்தோசத்தைவிட பணத்தை இழக்கும் பயம் அதிகம் இருப்பதால் தான். தோல்வி வெற்றியாளர்களை உந்தித் தள்ளும். தோல்வியாளர்களை தோல்வி வெற்றி பெறும். வெற்றியாளர்கள் எல்லா தோல்விகளையும் ஒரு வாய்ப்பாக பார்க்கிறார்கள். கவனமாக இருங்கள். தோல்வியை எப்படி எதிர்கொள்வது என்று யோசியுங்கள். சந்தேக நபர்கள் வெற்றி பெறுவதில்லை.
அத்தியாயம் 8
வருமானம் மூன்று வகை
சாதாரண வேலை வருமானம்
போர்ட்ஃபோலியோ வருமானம் - பங்கு, கடன் பத்திரங்கள்
நம் செயலற்ற வருமானம் - ரியல் எஸ்டேட்
நிதிச்சுதந்திரத்திற்கான வழி சம்பள வருமானத்தை போர்ட்ஃபோலியோ அல்லது செயலற்ற வருமானமாக மாற்றுவதில் உள்ளது. அதற்காக சொத்துக்களை உருவாக்குங்கள்.
இன்றே செயலாற்றுங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக